தடுப்பூசித் திட்டத்தை வெற்றி பெறச் செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பாராட்டு
சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் காப்பீட்டுக் கழக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கோவிட் 19 மற்றும் தடுப்பூசித் திட்ட மேலாண்மை குறித்து நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார்.
அப்போது மாணவர்களிடையே கலந்துரையாடிய டாக்டர். தமிழிசை செளந்தரராஜன், 14 வயதுடைய குழந்தைகளுக்கு இன்று தடுப்பூசி செலுத்த உள்ளோம், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா வைரஸ் குழந்தைகளை தாக்கக் கூடும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதனால்தான் ஏற்கெனவே முன்களப் பணியாளர்கள் தொடங்கி பொதுமக்கள், 15-18 வயதுடையோர் என அனைவருக்கும் இந்த தடுப்பூசி செலுத்தி சாதனைப் படைத்துள்ள நிலையில், தற்போது 12 – 14 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி மிகப் பிரம்மாண்டமான சாதனையை நம் நாடு படைக்க உள்ளது. ஏற்கெனவே 170 கோடி தடுப்பூசி செலுத்தியுள்ளோம். சுயசார்பு இந்தியா மூலம் தடுப்பூசி, பி பி இ கிட் ஆகியவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க பிரதமர் ஊக்குவித்தார். முதல் நாள் தடுப்பூசி செலுத்துகையில், இவ்வளவு தடுப்பூசி செலுத்தி விடுவோமா என்ற அச்சமும், பக்கவிளைவுகள் குறித்த பீதியும் இருந்தது. ஆனால் பக்கவிளைவுகள் எதுவுமின்றி 150 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட்டோம். அதுமட்டுமல்லாமல் 100 நாடுகளுக்கும் மேலாக தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளோம். பிற நாடுகளை எதிர்பாராமல் உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்து, மக்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளோம். எந்த நாடும் செய்யாத சாதனையை இந்தியா செய்துள்ளது. இதற்கு மத்திய அரசையும், இந்த திட்டத்தை மக்களுக்கு எடுத்துச் சென்ற மாநில அரசுகளையும் பாராட்ட வேண்டும். அத்தோடு பொதுமக்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார் தமிழிசை சவுந்தரராஜன்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசையின் கணவரும் மூத்த மருத்துவருமான செளந்தரராஜன், தொழிலாளர் காப்பீட்டுக் கழக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மருத்துவர். சவுமியா சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu