நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால சாதனைகள் குறித்து சிறப்பு கூட்டத்தொடரில் விவாதம்

நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால சாதனைகள் குறித்து சிறப்பு கூட்டத்தொடரில் விவாதம்

நாடாளுமன்ற மக்களவை 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடளுமன்றத்தின் 75 ஆண்டு கால சாதனைகள் குறித்து விவாதிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18ம் தேதி தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த தொடரின் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர் .

இந்த நிலையில் சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் நடைபெறும் முக்கிய விவாதம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, அரசியல் நிர்ணய சபை முதல் கடந்த 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணம் குறித்து சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் விவாதிக்கப்படுகிறது.

இதில் முக்கியமாக நாடாளுமன்றத்தின் சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள், கற்றல்கள் என பல்வேறு அம்சங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இதைத்தவிர மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மசோதாக்களும் சிறப்பு கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.இதில் முக்கியமாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த மசோதா ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இதைப்போல வக்கீல்கள் (திருத்தம்) மசோதா 2023, பத்திரிகைகள் பதிவு மசோதா 2023 போன்ற மசோதாக்களும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மேலும் தபால் அலுவலக மசோதா 2023 மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இது ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமர்வில் நாடாமன்ற நடவடிக்கைகள் பழைய கட்டிடத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்படும் என தெரிகிறது.

ஐந்து நாள் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தையும் அரசாங்கம் கூட்டியுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

கூட்டத்திற்கான அழைப்பிதழ் சம்பந்தப்பட்ட அனைத்து தலைவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்று ஜோஷி சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story