உலகின் பத்து தலைசிறந்த அழகிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காயத்ரிதேவி

உலகின் பத்து தலைசிறந்த அழகிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காயத்ரிதேவி
X

 காயத்திரிதேவி

உலகின் பத்து தலைசிறந்த அழகிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ப்பூரின் மூன்றாவது மகாராணி காயத்ரிதேவி நினைவு நாள்

காயத்ரி தேவி ஜெய்ப்பூரின் ராஜ மாதா என்றும் "மகாராணி காயத்ரி தேவி" என்றும் அழைக்கப்பட்டவர். மேற்கு வங்காளம், கூச் பெகர் மாவட்டத்தின் தலைநகரான கூச் பெகர் என்ற ஊரில் இளவரசியாகப் பிறந்தார். ஜெய்ப்பூரின் மகாராஜா இரண்டாம் சவைமான் சிங் என்பவரை மணந்ததன் மூலம், 1939 முதல் (அரசியலமைப்புச் சட்ட மாறுதல்கள் மூலம் அரச பதவிகள் ஒழிக்கப்பட்ட) 1971 வரை ஜெய்ப்பூரின் மூன்றாவது மகாராணியாகத் திகழ்ந்தார்.

தன் இளவயதுகளில் அழகுப் பதுமையாகவும் அங்கீகாரம் பெற்றிருந்தார். சுவிட்சர்லாந்தில் உயர்கல்வி கற்றார். குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு இந்தியாவின் வெற்றிகரமான அரசியல்வாதியானார். தன்னுடைய தொண்ணூறாவது வயதில் ஜெய்ப்பூரில் இறந்தார்.

காயத்ரி தேவி, மேற்கு வங்காளம், கூச் பெஹர் மாவட்டத்தின் தலைநகரான கூச் பெஹர் என்கிற ஊரில் 1920 ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் நாள், மகாராஜா ஜித்தேந்திர நாராயணன் - மகாராணி இந்திரா தேவி தம்பதிகளின் இளவரசியாகப் பிறந்தார்.

கொல்கத்தாவில் சாந்தினிகேதனிலும், சுவிட்சர்லாந்தில் லாஸேன் நகரிலும், அதனைத் தொடர்ந்து லண்டன் ஸ்கூல் ஆஃப் செக்ரட்டரிஸிலும் கல்வி கற்றார். 1940-ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் நாள் ஜெய்ப்பூர் மகாராஜா இரண்டாம் சவாய் மான்சிங் என்பவருக்கு மூன்றாம் தாரமாக வாழ்க்கைப்பட்டார்.

குதிரையேற்றம், அழகுக்கலை, பெண்கல்வி, கைவினைக் கலை போன்ற பல்வேறு துறைகளில் திறமையும் ஆர்வமும் கொண்டவராகத் திகழ்ந்தார். வோக் பத்திரிக்கை உலகின் மிக அழகிய பெண்கள் பத்துப் பேரில் இவரையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது. ஜெய்ப்பூரில் பெண்களின் கல்விக்காக "காயத்ரி தேவி பப்ளிக் ஸ்கூல்" ஆரம்பித்து நடத்தி வந்தார். ஜெய்ப்பூரின் கைவினைக் கலையான நீலக் களிமண் குயவுத் தொழில் மேம்பாட்டுக்கு உதவி செய்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசாட்சிகள் முடிவுக்கு வந்து மக்களாட்சி தொடங்கியதும் இவர் ஒதுங்கிக் கொள்ளவில்லை. மக்களின் ஆதரவு பெற்ற பாராளுமன்ற உறுப்பினராக 1962 தேர்தலில் 'கின்னஸ் சாதனை' ஓட்டுக்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் 1967 மற்றும் 1971 ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜியின் சுதந்திராக்கட்சி ராஜஸ்தானில் காலூன்றி வளர இவர் ஒரு முக்கியக் காரணம். காங்கிரஸையும் இந்திராகாந்தியையும் எதிர்த்து அரசியல் நடத்தினார். நெருக்கடிநிலையை எதிர்த்த காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டார். இவர் மீது வரி ஏய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணி மோசடிக் குற்றங்கள் சாட்டப்பட்டு திகார் சிறையில் ஐந்து மாதம் அடைக்கப்பட்டார். அதன்பிறகு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

1976-ல் இவருடைய சுயசரிதை (A Princess Remember) வெளியிடப்பட்டது. ஃப்ராங்கோயிஸ் லெவி இயக்கிய Memoirs of a Hindu Princess என்கிற திரைப்படம் இவரை மையமாகக் கொண்டது. 1999-ல் பாராளுமன்றத் தேர்தலின் போது இவருடைய பிறந்த மண்ணான கூச் பெஹர் தொகுதியை இவருக்குத் தந்து வேட்பாளராக அறிவிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தயாராக இருந்தது. இவர் அந்த வாய்ப்பினை மறுத்து விட்டார்.

ஆனால் பொதுக் காரணங்களுக்காகப் போராடும் மன உறுதியை இழந்தாரில்லை. தன்னுடைய 89-ஆவது வயதில் (2008) ஜெய்ப்பூர் நகரில் அனுமதியற்ற ஆக்ரமிப்புகள் அதிகரித்து வருவதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.

பெற்றோர் வழியிலும் திருமண உறவின் மூலமாகவும், ராஜபுதனம், பரோடா, ஜோத்பூர், திரிபுரா, தென்னிந்தியாவின் பித்தாபுரம், இஸ்ராடா, பாரியா, லூனாவாடா முதலிய அரசக்குடும்பங்களுடன் இவருக்கு நேரடியாகவோ கிளை வழிகளிலோ குடும்ப உறவு இருந்தது.

இரைப்பை சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட இவர் லண்டனில் கிங் எட்வர்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அங்கிருந்த தனிமை பிடிக்காமல் ஜெய்ப்பூர் திரும்பிய இவர் ஜூலை 17ஆம் நாள் சந்தோக்பாய் துர்லாபாய் நினைவு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். வேறுபல உபாதைகளும் தாக்க, சிகிச்சைபலன் இன்றி 2009 ம் ஆண்டு ஜூலை 29-ஆம் நாள் உயிர் நீத்தார்.

இவர் உலகின் பத்து தலைசிறந்த அழகிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போது இவருடன் அந்தப்பட்டியலில் இருந்த நடிகை லீலா நாயுடுவின் மரணமும் அதற்கு முந்தையநாள் தான் நிகழ்ந்திருந்தது. ஜெய்ப்பூரில் ஜால்மகால் என்கிற பகுதிக்கு அருகில் அரச குடும்பத்துப் பெண்கள் புதைக்கப்படும் இடத்தில் முந்தைய இரண்டு மகாராணிகளின் கல்லறைகளுக்கு அடுத்து இவருடைய கல்லறையும் அமைக்கப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலத்தில் ராஜஸ்தான் மாநில கவர்னர், முதல்வர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!