அகிம்சை போராட்டத்தால் ஆங்கிலேயரை விரட்டிய மகாத்மா
Gandhi Adigal Porattam
Gandhi Adigal Porattam
மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.
மகாத்மா காந்தி தலைமையில் நடந்த உப்புசத்தியாக்கிர யாத்திரை (பைல்படம்)
இளமை
மோகன்;தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி; தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவதாஸ் (1890). மோகனதாஸ் கரம்சந்த் காந்தி, தனது 16வது வயதில் தந்தையை இழந்தார்.
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் தாதா அப்துல்லாஹ் கம்பெனி எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.
தென்னாப்பிரிக்காவில்
இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
மகாத்மா காந்தியுடன் முகமது அலி ஜின்னா பேச்சுவார்த்தைக்கு வந்த போது (பைல் படம்)
1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.
மும்பை துறைமுகத்தில்
1915 -ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார்.இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய் பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது
இந்திய விடுதலைப் போராட்டத்தில்
தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
தண்டி யாத்திரை
பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
முன்னாள் மறைந்த பாரத பிரதமர் ஜவுஹர்லால் நேருவுடன் மகாத்மா காந்தியடிகள்.(பைல்படம்)
காந்தியடிகளுடன் முகமது அலி ஜின்னா
வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.
சென்னை காந்தி மண்டபத்தின் உட்புறத்தோற்றம் (பைல்படம்)
மகாத்மா
காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
நினைவு நாள்
மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் ஏலம்
இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய சர்க்காவும், அவரது கடைசி உயிலும் 2013இல் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டது.அவரது சர்க்கா 1,10,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் ஒரு கோடி), அவரது கடைசி உயில் 20,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் 18 லட்சம்) ஏலம் போனது. இந்த ஏலம் பற்றி முன்னமே அறிந்திருந்தும் எந்த தடையும் இந்திய அரசு ஏற்படுத்தாதலால், அவை தனி நபர் வசம் செல்லும் மதிப்பற்ற நிலை அந்தப் பொருட்களுக்கு ஏற்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu