தேர்தல் பத்திரம் குறித்த அனைத்து தகவல்களும் வெளியீடு: உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ !
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 12ஆம் தேதிக்குள் எஸ்பிஐ வங்கி ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், எஸ்பிஐ தரும் தரவுகளை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் மார்ச் 15ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டு கால அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் விவரங்களை தனித்தனியாக எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது. அதனை தேர்தல் ஆணையம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டது. குறிப்பாக, தேர்தல் பத்திர எண்களை எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவில்லை, இந்த தேர்தல் பத்திர எண்களை வெளியிட்டால் யார் யார் எந்தெந்த கட்சிகளுக்கு நன்கொடை அளித்தார்கள் என்ற விவரங்கள் தெரியவரும் என உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மார்ச் 21ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் எஸ்பிஐ வங்கி சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் இன்று (மார்ச்.21) சமர்ப்பித்து உள்ளது. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டு விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.
எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், பத்திரத்தை வாங்குபவரின் பெயர், பத்திரத்தின் மதிப்பு மற்றும் குறிப்பிட்ட எண், பத்திரத்தை பணமாக்கிய தரப்பினரின் பெயர் போன்ற தகவல்களை வங்கி வெளிப்படுத்திஒ உள்ளது. அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் மற்றும் பணமதிப்புப் பத்திரத்தின் மதிப்பு மற்றும் எண் உள்ளிட்ட தரவுகளும் வெளியிடப்பட்டு உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu