மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சண்டை: கமாண்டோ படை வீரர் பலி
மணிப்பூர் வன்முறை
மணிப்பூரில் புதன்கிழமை காலை தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள எல்லை நகரமான மோரேயில் குக்கி தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் புதிய வன்முறை வெடித்தது. துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ் கமாண்டோ உயிரிழந்தார்.
மணிப்பூரில் பெரும்பான்மையினராக இருக்கும் மைத்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி பேரணியில் ஈடுபட்டனர். அந்த பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. பின்னர் அது கலவரமாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது. இந்த கலவரத்தில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
ஆனால் அங்கு இன்னும் வன்முறை முழுமையாக ஓய்ந்தபாடில்லை. கடந்த 1ம் தேதி தவுபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் சிங் ஜாவ் பகுதியில் மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
மணிப்பூரின் மோரே பகுதியில் கமாண்டோ படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று காலை ஒரு கோவில் அருகே தூங்கிக்கொண்டிருந்த கமாண்டோ படையினர் மீது கலவரக்காரர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு மற்றும் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் கமாண்டோ படை வீரர் சோமோர்ஜித் பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார். இறந்த வீரர் சோமோர்ஜித் மற்றும் காயமடைந்த வீரர் விமானம் மூலம் இம்பாலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உடனே கமாண்டோ படையினர் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் சண்டை நடந்தது. கலவரக்காரர்கள் வார்டு 7 அருகே நடத்திய இந்த துப்பாக்கிச்சூடு சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
மோரேவில் ஒரு போலீஸ் அதிகாரியைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு வன்முறை நடந்துள்ளது.
மணிப்பூர் அரசு, "அமைதி மீறல், பொது அமைதிக்கு இடையூறு மற்றும் தெங்னௌபால் வருவாய் அதிகார எல்லைக்குள் மனித உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு பெரும் ஆபத்து" என அஞ்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu