மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சவால்

மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சவால்

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்.

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் என மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சவால் விடுத்துள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டை மத்திய அரசு நிரூபித்தால், அரசியலிலிருந்தே விலக தயார் என ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் பதற்றத்திற்கு பஞ்சமில்லாமல் இருப்பதை போலவே, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அரசியல் சலசலப்பு உச்சத்தை எட்டியிருக்கிறது. இதற்கான தொடக்கப்புள்ளி, முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீதான பணமோசடி குற்றச்சாட்டுதான். சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது.

ஹேமந்த் சோரன், ஜாரக்கண்ட் முக்தி மோர்சா+காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் முதல்வராக பதவி வகித்து வந்தார். இப்படி இருக்கையில் அமலாக்கத்துறை தனது குற்றச்சாட்டு குறித்து தீவிரமான விசாரணையில் இறங்கியது. 7 முறை விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியும் சோரன் அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, "இவை அனைத்தும் தனக்கு எதிராக, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு எதிராக பின்னப்பட்ட வலை" என்று கடுமையாக சாடியிருந்தார்.

இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என அவர் வீட்டில் இருக்கும் நேரமாக பார்த்து, வீட்டிற்குள் புகுந்து கடந்த மாதம் 20ம் தேதி 8 மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு பிறகு, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையை சோரன் தீவிரப்படுத்தினார், மறுபுறம் மேலும் இரண்டு சம்மன்களை அமலாக்கத்துறை அனுப்பி தள்ளியது. அமலாக்கத்துறையின் பிடியிலிருந்து வெளியேற சோரன் முயல, அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரம் காட்ட யார் முந்துவது என்கிற சூழல் உருவானது. இறுதியாக அமலாக்கத்துறை கடந்த வாரம் ஹேமந்த் சோரனை கைது செய்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2ம் தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அடுத்த நாள் ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றார். அவர் பதவியேற்ற நிலையில், 5ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். எனவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு இறுதி கட்டத்தை எட்டியது.

ஜார்க்கண்ட் சட்டசபையை பொறுத்த வரையில் மொத்தம் 81 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனில் 41 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. எனவே இன்று திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. இதில், வாக்களிக்க சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்நிலையில் இன்றைய வாக்கெடுப்பின்போது பேசிய ஹேமந்த் சோரன், "என் மீதான ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு பாஜகவுக்கு சவால் விடுகிறேன், நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் அரசை சீர்குலைக்க பாஜக முயன்றது. மத்திய அரசின் இந்த சதி திட்டத்தின் பின்புலத்தில் ஆளுநர் மாளிகையும் இருக்கிறது. என்னை கைது செய்யப்பட்ட நாள் தேசத்தின் கருப்பு நாள்" என்றும் சாடியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பின் இறுதியில் சம்பாய் சோரன் தலைமையிலான ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா+காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்து வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story