சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்: ஊழல் தடுப்பு நீதிமன்றம் அதிரடி
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்து செய்யப்பட்டுள்ளார். இவருடைய ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு துறையின் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறி நேற்று காலை 6 மணியளவில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த கைதை அடுத்து, ஆந்திரா மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன.
சந்திரபாபு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக குடியரசு தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெலுகு தேசம் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனிடிடையே,1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு மீது ஏபிசி 120(பி), 166, 167, 418, 420, 465, 468, 201, 109, 34 மற்றும் 37 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டு விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, அதிகாலையில் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி மாநில குற்ற புலனாய்வு துறை தரப்பில் கோரப்பட்டது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுக்கு விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல் விதித்துள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் கைது செய்யப்பட்டதற்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களை பதிவு செய்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சந்திரபாபுவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து, சிறப்பு விமானத்தில் விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்திற்கு செல்ல பவன் கல்யாண் புறப்பட்டார். ஆனால், சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அவர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து, சாலை மார்க்கமாக அவர் விஜயவாடா நோக்கி புறப்பட்டபோது, அனுமஞ்சிபல்லை எனும் பகுதியில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதனை கண்டித்து காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்ற பவன் கல்யாண், பின்னர் சாலையிலேயே படுத்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். காவல்துறைபேச்சுவார்த்தையை அவர் ஏற்க மறுத்ததால் பாதுகாப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். இதனால், ஜனசேனா தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu