FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருடுவதாக வீடியோ வைரல்: உண்மை என்ன?

FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருடுவதாக வீடியோ வைரல்: உண்மை என்ன?
X
அந்த வீடியோ போலியானது என்றும் அதன் ஃபாஸ்டேக் தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்றும் Paytm தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக வாட்ஸ்ஆப், ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வீடியோவில், ஸ்மார்ட்வாட்ச் அல்லது அதுபோன்ற சாதனத்தைப் பயன்படுத்தி வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள டிஜிட்டல் ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரில் இருந்து பணம் திருடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்களை பீதியடைய வைத்திருக்கும் இந்த வீடியோவில் கூறப்படும் தகவல்கள் உண்மையா?

இந்த வீடியோவில் பகிரப்பட்ட தகவல்கள், காண்பிக்கப்படும் காட்சிகள் உண்மையா போலியா என்பதை உறுதிப்படுத்தும் முன்பே சமூக ஊடகங்களில் பிரபலங்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்பட பலரும் "எனது ஃபாஸ்ட் டேக்கில் கூட பணம் திருடப்பட்டுள்ளது, என்றும் நான் செல்லாத இடத்துக்கு ஃபாஸ்ட்டேக் மூலம் பணம் கழிக்கப்பட்டதாக எனக்கும் செய்தி வந்துள்ளது" என்றும் அவர்களின் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோவில், ஒரு ஊர்ப்பகுதியில் நின்ற காரின் முன்பக்க கண்ணாடியை ஒரு சிறுவன் துணியால் துடைப்பது போலவும் காரின் பானட் மீது ஏறி அந்த சிறுவன் கண்ணாடியைத் துடைக்கும்போது அவனது கையில் கைக்கடிகாரம் போன்ற ஸ்மார்ட்வாட்ச் ஃபாஸ்ட்டேக் பகுதியைத் துடைக்கும்போது சிவப்பு நிறத்தில் ஸ்கேன் செய்த மறுகணமே அந்த சிறுவன் கிளம்புவது போலவும் காட்சி இடம் பெற்றுள்ளது.

அந்த காருக்குள் இருக்கும் நபர் அந்த சிறுவனை அழைத்து காரை துடைத்து விட்டு பணம் வாங்காமல் போகிறாயே என கேட்க, அதற்கு அந்த சிறுவன், ஆமாம், பணம் கொடுங்கள் என கேட்கிறார். அப்போது அந்த சிறுவனிடம் உன் கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தை காண்பி என கூறும்போது அந்த சிறுவன் அங்கிருந்து ஓட, அவனை காருக்குள் இருந்து இறங்கிய நபர் விரட்டி ஓடுகிறார். பிறகு அந்த முயற்சி பலனளிக்காமல் போகவே காருக்கே அந்த இளைஞர் திரும்பி வருகிறார்.


இதைத்தொடர்ந்து காருக்குள் இருக்கும் மற்றொரு நபர், "இதுதான் இப்போது புதிய வகை ஃபாஸ்ட்டேக் மோசடி" எனக் கூறி அது ஃபாஸ்ட் டேக் பார்கோட் ஸ்கேனிங் மூலம் நடப்பதாகவும் அதன் மூலம் வாடிக்கையாளர்களின் ஃபாஸ்ட் டேக் கணக்கில் உள்ள பணம் திருடப்படுவதாகவும் கூறி எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியில் இந்த தகவல்களை கூறுகிறார்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை அமலில் இருந்த கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடிகளை கடக்கும் முறைக்கு பதிலாக, ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களில் ரீசார்ஜ் முறையில் பணம் கழிக்கப்படும் வசதி 2021ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டது. இத்தகைய ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் சுங்கச்சாவடியை கடக்க வாகனங்கள் முற்பட்டால் அவற்றுக்கு அந்த சாவடியில் வசூலிக்கப்படும் வாகனத்துக்குரிய கட்டணத்துக்கு நிகராக மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை எச்சரித்துள்ளது.

இதனால் தற்போது கிட்டத்தட்ட 90 சதவீத வாகனங்கள் ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டியதை உறுதிப்படுத்திக் கொண்டே சுங்கச்சாவடிகளை கடக்கின்றன. புதிய வாகனங்கள் வாங்கப்படும்போது ஷோரூம்களிலேயே இந்த ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்கப்படுகின்றன.

இந்த நிலையில், ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் மூலம் நூதன திருட்டு நடத்தப்படுவதாக வீடியோ பரவியதால் வாகன உரிமையாளர்கள் கலக்கமடைந்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் சேவையை வழங்கும் பேடிஎம் நிறுவனம், சமீபத்தில் பகிரப்பட்ட வீடியோவை போலி என்று அறிவித்து தனது சமூக ஊடக பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.


"FASTagஐ ஸ்மார்ட்வாட்ச் மூலம் ஸ்கேனிங் செய்ய முடியும் என்பது போல தவறாகக் காட்டும் ஒரு வீடியோவில், Paytm FASTag பற்றிய தவறான தகவல் பகிரப்படுகிறது. NETC வழிகாட்டுதல்களின்படி, FASTag கட்டண வசூல் முறையை, அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களால் மட்டுமே தொடங்க முடியும். Paytm FASTag முற்றிலும் பாதுகாப்பானது," என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் இருந்து ஃபாஸ்ட்டேக் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ஆன்லைனில் பிடித்தம் செய்யும் பொறுப்பு வகிக்கும் தேசிய பேமென்ட்ஸ் கார்பரேஷன் இந்த போலி வீடியோவை சமூக ஊடக தளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு முறை ஃபாஸ்டேக் ஸ்டிக்கரில் உள்ள பார்கோட் மூலம் பணம் கழிக்கப்படும்போதும் தொழில்நுட்ப ரீதியாக அது எவ்வாறு செயல்படும் என்பதையும் விளக்கி அதில் தவறே நடக்க வாய்ப்பில்லை என்றும் என்பிசிஐ கூறியுள்ளது.


இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நபர் எதற்காக இப்படியொரு போலியான தகவலை பகிர்கிறார், அதில் இடம்பெற்ற நபர் யார், ஸ்மார்ட் வாட்ச் சாதனத்துடன் காரை துடைப்பது போல வந்த சிறுவன் யார், இவர்கள் எல்லாம் எங்கிருப்பவர்கள் போன்ற விவரம் தெரியவில்லை.

சம்பந்தப்பட்ட காணொளி பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு விசாரிக்க உள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil