இந்தியில் மருத்துவ படிப்புக்கு நிபுணர்கள் எதிர்ப்பு

இந்தியில் மருத்துவ படிப்புக்கு நிபுணர்கள் எதிர்ப்பு
X

கோப்பு படம்.

இந்தியில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டு இருப்பதற்கு நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் எந்த பயனும் இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயன்று வருவதாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக தமிழகம் கடுமையா எதிர்த்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு இந்தி திணிப்பு கூடாது என்று கண்டன கடிதம் எழுதி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு இந்தியை எதிர்த்து தமிழகம் முழுவதும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நாட்டிலேயே முதல் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். மருத்துவ உயிர் வேதியியல், மருத்துவ உடற்கூறியல், மருத்துவ உடலியல் ஆகிய பாடங்களுக்கான இந்தி மொழியில் உள்ள புத்தகங்களையும் அவர் வெளியிட்டார். மேலும் 8 பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்க பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

போபாலில் இருக்கும் காந்தி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 97 நிபுணர்கள் இந்தி மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை தயாரித்து உள்ளனர். ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழியில் பாடப்புத்தகங்களை மொழிபெயர்த்து உருவாக்க 232 நாட்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்தி மொழியில் மருத்துவ படிப்பு தொடங்குவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்கிலத்தை தவிர்த்து பிராந்திய மொழிகளில் மருத்துவம் படிப்பதால் எந்த பயனும் இல்லை என்று கல்வி நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்தியில் மருத்துவ படிப்பால் எந்த நன்மையும் இல்லை பாதகமான விளைவுகளை தான் ஏற்படுத்தும் என்றும் இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளரும், நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோகித் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, இந்தியாவில் இந்தி தவிர பல மொழிகள் உள்ளன. பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க வருவார்கள். தென் மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இந்தி சரியாக தெரியாது. இவர்கள் இந்தி பேசும் மாநிலங்களில் மருத்து படிப்பில் சேரமுடியாத நிலைமை ஏற்படும்.

இந்தியில் மட்டும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் தொடர்பாக மேல்படிப்பு படிக்கவோ, ஆராய்ச்சியில் ஈடுபடவோ முடியாது. உலக அளவில் மருத்துவ பத்திரிகைகள், வழிமுறைகள், ஒழுங்குமுறைகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. இந்தியில் படிப்பவர்கள் அவைகளை தெரிந்து கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதே போல் மருத்துவ இந்தி படிப்புக்கு எதிராக பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!