பெங்களூரு-மைசூரு இடையே முதல் மின்சார பேருந்து சேவை

பெங்களூரு-மைசூரு இடையே முதல் மின்சார பேருந்து சேவை
X
கர்நாடகா அரசு போக்குவரத்துத்துறை சார்பில் பெங்களூரு-மைசூரு இடையே முதல் மின்சார பேருந்து சேவை இன்று முதல் தொடங்குகிறது

கா்நாடகத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி டீசல், பெட்ரோல் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சார பேருந்துகளை இயக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி முதல்கட்டமாக பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பிலும் மின்சார பேருந்து சேவையை தொடங்க திட்டமிட்டது. அதன்படி மின்சார பேருந்துசின் சோதனை ஓட்டம் பெங்களூருவில் இருந்து ராமநகர் வரை நேற்று முன்தினம் நடந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மின்சார பேருந்துகளை வெளிமாவட்டங்களுக்கு இயக்க கர்நாடகா அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

இந்த நிலையில் பெங்களூரு-மைசூரு இடையே கே.எஸ்.ஆர்.டி.சி.யின் முதல் மின்சார பேருந்து சேவை இன்று (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இந்த பேருந்தி 43 பேர் அமர்ந்து பயணிக்கலாம். ஒரு இருக்கைக்கும், மற்றொரு இருக்கைக்கும் விசாலமாக இடைவெளி விட்டு இந்த மின்சார பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளை கவரும் வகையில் இருக்கும்.

இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் கூறுகையில், 'இந்த மின்சார பேருந்து பெங்களூரு-மைசூரு இடையே இடைநில்லாமல் இயக்கப்படும். இந்த மின்சார பேருந்துகளில் எந்தவித இரைச்சல் சத்தம் இல்லாமலும், மாசு இல்லாமலும் உயர்தர வசதியுடன் மக்கள் பயணிக்கலாம்.

இந்த மின்சார பேருந்தில் பெங்களூரு-மைசூரு இடையே ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த மின்சார பேருந்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 320 கிலோ மீட்டர் வரை இயக்கலாம். முதல்கட்டமாக 20 பேருந்துகள் இந்த மாத இறுதிக்குள் இயக்கப்படும். மீதமுள்ள பேருந்துகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) இயக்கப்படும் என்று கூறினார்

Tags

Next Story
ai in future agriculture