மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்: முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர்.
சுமார் 40 சிவசேனா எம்.எல்.ஏக்கள், சிவசேனா கட்சி மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாய்ந்தனர். கவுகாத்தியில் உள்ள நட்சத்திர விடுதியில் முகாமிட்டிருந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக தெரிவித்ததால், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இதனையடுத்து 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யும்படி, துணை சபாநாயகர் நர்ஹரி ஜெர்வாலிடம் சிவசேனா மனு அளித்தது. அதன்படி விளக்கம் கேட்டு துணை சபாநாயகர் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏக்நாத் ஷிண்டே உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு அதுவரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டது.
இதற்கிடையே முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று ( ஜூலை 30) மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டிருந்தார். அதேநேரம், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்கக்கோரி உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து நள்ளிரவில் ஆளுநரை சந்தித்த உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியையும், சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்..
இதனையடுத்து மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று தகவல் வெளியானது.
இன்று அல்லது நாளை தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராஜவும் பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகின.
இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்பார் என தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்திருக்கிறார்.
பாஜக 105 எம்.எல்.ஏக்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது,. இருந்தபோதிலும் ஆட்சியமைக்க தேவையான பலம் இல்லை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.
ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என்றும், அவரது ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu