வாடிக்கையாளர்கள் பணத்தில் சூதாட்டம்: வங்கி ஊழியர் மீது நடவடிக்கை

வாடிக்கையாளர்கள் பணத்தில் சூதாட்டம்: வங்கி ஊழியர் மீது நடவடிக்கை
X

கோப்புப்படம் 

வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி இணையத்தில் விளையாடிய வங்கியின் ஊழியருக்கு சொந்தமான சொத்து விவரங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் ஊழியர் பெதன்ஷு சேகர் மிஸ்ரா என்பவருக்கு எதிராக சிபிஐ பதிவுசெய்த நிதி மோசடி வழக்கின் விசாரணையை துவக்கிய அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மிஸ்ரா மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது அமலாக்கத்துறை. குற்றம் சாட்டப்பட்டுள்ள சேகர் மிஸ்ராவின் ரூ.2.56 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளன.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள கால்சா கல்லூரி பஞ்சாப் & சிந்து வங்கி கிளையில் சேகர் மிஸ்ரா பதவி வகித்த காலத்தில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடான பல பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார்.

பல்வேறு வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்புநிதித் தொகையில் இருந்து பணத்தினை முறைகேடாக எடுத்து இவர் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு 52,99,53,698 ரூபாயை திருடியுள்ளார் என்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முறைகேடு தெரியவந்ததையடுத்து, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி நிர்வாகம் கடந்த நவ.16ம் தேதி இவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களின் பணத்தினை எடுத்து இவர் சூதாட்டச் செயலிகளும், ஆன்லைன் விளையாட்டுகளிலும் ஈடுபட்டது அமலாக்கத்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!