துபாயில் இருந்து கேரளா விமான கட்டணம் நான்கு மடங்கு உயர்வு

கோப்புப்படம்
கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட கேரள மாநிலத்தினர் இருப்பதாகவும், அவற்றில் சவுதியில் மட்டும் 4.5 லட்சம் பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் வசித்துவரும் அவர்கள், குடும்பத்தினரை பார்ப்பதற்காக அவ்வப்போது விடுமுறை எடுத்து ஊருக்கு வருவார்கள். மேலும் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊருக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பண்டிகை காலங்களின் போது அதிகமானோர் தங்களது நாடுகளுக்கு செல்லும் நேரத்தில் விமான கட்டணத்தை உயர்த்துவது வாடிக்கையாக நடந்துவருகிறது. விமான நிறுவனங்களின் இந்த செயல்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் பயணிப்பதற்கான விமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் 4 மடங்கு உயர்த்தியுள்ளது. வழக்கமான நாட்களில் துபாயில் இருந்து கேரளாவுக்கு வர விமான கட்டணம் 10ஆயிரம் ரூபாய். ஆனால் கிறிஸ்துமஸ் காலத்தில் இந்த கட்டணத்தை 40ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு விமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் பலமடங்கு உயர்த்தியிருப்பது வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மாநில மக்களை கடும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. எரிபொருள் விலை உயர்வே விமான கட்டணத்தை உயர்த்த காரணம் என்று விமான நிறுவனங்கள் கூறியிருக்கின்றன.
அதாவது கடந்த ஜூன் மாதம் முதல் எரிபொருள் விலை உயர்வு 32 சதவீதத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக விமான நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. சட்டப்படி விமான கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் விமான நிறுவனங்களுக்கு இருக்கிறது.
இருந்தபோதிலும் அதில் தலையிட மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்பதால், தற்போது விமானகட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu