குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு வரும் 25 ம் தேதி பதவியேற்பு

குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு வரும் 25 ம் தேதி பதவியேற்பு
X

திரௌபதி முர்மு (பைல் படம்) 

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்று இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக வரும் 25ம் தேதி பதவியேற்க உள்ளார்.

நாட்டின் 16வது குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்காளர் குழுமத்தில் 776 எம்.பிக்கள் மற்றும் 4,033 எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றிருந்தனர். நாடாளுமன்ற வளாகம், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற வளாகங்கள் என மொத்தம் 31 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 4,809 வாக்குகளில் 4,754 வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள அறை எண் 63ல் எண்ணப்பட்டன. காலை 11 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் திரௌபதி முர்மு வெற்றியை தேர்தல் நடத்தும் அலுவலரான பி.சி.மோடி அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு அறிவித்தார். குடியரசு தலைவர் தேர்தலில் சுமார் 64 சதவீத வாக்குகளை திரௌபதி முர்மு பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 4,754 வாக்குகளில் செல்லாத வாக்குகள் 53. மீதமுள்ள 4,701 வாக்குகளில் திரௌபதி முர்வுக்கு 2,824 வாக்குகள் கிடைத்தன. அந்த வாக்குகளின் மொத்த மதிப்பு 6,76,803 ஆகும். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா சுமார் 36 சதவீத வாக்குகளையே பெற்றார்.

இந்நிலையில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் பெற்று நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக பழங்குடியின பெண் ஒருவர் குடியரசு தலைவர் ஆவது இதுவே முதல்முறையாகும். இதனையடுத்து வரும் 25ந்தேதி 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture