திமுக குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரபரப்பு கருத்து
இலவச திட்டங்களை முறைப்படுத்தக்கோரி அஸ்வினி குமார் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இன்றைய விசாரணையின் போது, இலவச திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை திவால் நிலைக்கு இட்டுச்செல்லும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மத்திய அரசின் சார்பிலும் இதே வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது தலைமை நீதிபதி, தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்படி உத்தரவிட முடியும் என்ற கேள்வியை முன்வைத்தார்.
மேலும், இது குறித்து மத்திய அரசு கூறும்போது, போலியான இலவச அறிவிப்புகள் பொருளாதாரத்தை சீரழிக்கின்றன என்று தெரிவித்தது.
அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடும்போது தலைமை நீதிபதி கடும் கோபத்துடன், திரு வில்சன், நான் நிறைய விஷயங்களைச் சொல்ல வேண்டும், ஆனால் நான் தலைமை நீதிபதியாக இருப்பதால் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். நீங்கள் மட்டுமே புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்காதீர்கள். நீங்கள் பேசும் விதம், அறிக்கைகள் கொடுப்பது, .சொல்வதையெல்லாம் நாங்கள் கண்டும் காணாதது போல் இருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கிறோம். உங்கள் கட்சி மட்டுமே அறிவாளித்தனமாக செயல்படுகிறது என நினைக்கவேண்டாம் என்று கூறினார்
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், தலைமை நீதிபதியின் கருத்துக்கு துணையாக, " ஆமாம், தமிழக நிதியமைச்சர் சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக டிவியில் பேசுவதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம், அவை சரியானவை அல்ல" என்றார்.
இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது வாய்மொழி கருத்துக்களால் விமர்சித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu