இந்தியாவில் இப்படியும் ஒரு பிரதமர் இருந்தார் என்பது தெரியுமா மக்களே?

இந்தியாவில் இப்படியும் ஒரு பிரதமர் இருந்தார் என்பது தெரியுமா மக்களே?
X

குல்சாரிலால் நந்தா

இந்தியாவில் இப்படியும் ஒரு பிரதமர் இருந்தார் என்பதை தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை படிக்கலாம்.

தமிழக அரசியலில் எளிமையாக வாழ்ந்த தலைவர்கள் யார்? என்று கேட்டால் 'பட்' என நமக்கு ஞாபகம் வருவது பெருந்தலைவர் காமராஜரும், அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கனும் தான். காரணம் 9 ஆண்டுகாலம் தமிழக முதல்வராக இருந்த காமராஜர் இறந்த போது 7 நான்கு முழ வேட்டியும், 150 ரூபாய் பணம் தான் அவரது கையிருப்பு.

வீடு கூட சொந்த வீடு அல்ல. அதேபோல கக்கன் தனது வாழ்நாளின் கடைசி நாட்களில் உடல் நலிவடைந்த போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு வசதி இன்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.அப்போது இதனை அறிந்து முதல்வராக இருந்த எம்‌ஜி.ஆர். உதவி செய்தார் என்பது ஒரு தனி கதை.இது இந்த இரண்டு தமிழ் தலைவர்களின் எளிய வாழ்க்கை பற்றிய ஒரு வரலாறு.

இவை ஒருபுறமிருக்க ஆசிய ஜோதி என போற்றப்படும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரை இந்திய பிரதமர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி நாம் ஓரளவு அறிந்து இருப்போம்.

இவர்களில் இரண்டு முறை இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தா பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்தபோது 1898ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி பஞ்சாப் மாநிலம் சியால்கோட்டில் (தற்போதைய பாகிஸ்தான்) நவம்பர் மாதம் பிறந்தார் குல்சாரிலால் நந்தா.

லாகூர், ஆக்ரா, அகமதாபாத் ஆகிய இடங்களில் பொருளாதாரம் படித்த மிகச் சிறந்த பொருளாதார நிபுணரான இவர் சிறந்த காந்தியவாதி என்பது மட்டுமல்ல காந்திய கொள்கைகளை முழுமையாக கடைபிடித்தவர். தனது இறுதி நாள் வரை அதன்படியே இருந்து மறைந்தார் .

இவர் நேரு மறைந்தபோது 1964ஆம் ஆண்டும், லால்பகதூர் சாஸ்திரி மறைந்தபோது 1966ஆம் ஆண்டும் இரண்டு முறை தலா 13 நாட்கள் மட்டும் இந்தியாவின் இடைக்கால பிரதமராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமல்ல நேரு, லால் பகதூர் சாஸ்திரி மந்திரிசபை சபைகளில் உள்துறை மந்திரியாகவும், இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார் .

சரி இப்போது இவரைப் பற்றி தெரிந்து கொள்ள என்ன அவசியம் என நீங்கள் கேட்பது புரிகிறது.அவரது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது என்ன நிகழ்வு என்பதை பார்ப்போம். குல்சாரி லால் நந்தா சுதந்திர போராட்ட தியாகி கூட. ஆனால் அதற்கான ஓய்வூதியத்தை கூட அவர் பெற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் தனது இறுதிக் காலத்தில் அவர் கடுமையாக வறுமையால் பாதிக்கப்பட்டார். அகமதாபாத்தில் ஒரு முறை அவர் குடியிருந்த வீட்டில் மாத வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் அவரது வீட்டில் இருந்த கட்டில், அலுமினியப் பொருட்கள் உட்பட தட்டுமுட்டு சாமான்களை தூக்கி வெளியே எறிந்து விட்டார். அவருக்கு குல்சாரிலால் நந்தா இரண்டு முறை இடைக்கால பிரதமராக இருந்தவர் என தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஆனால் இதனை அந்த வழியாக சென்ற ஒரு பத்திரிகையாளர் பார்த்து படத்துடன் தனது நாளிதழில் செய்தியாக வெளியிட்டு விட்டார். இரக்கமில்லாமல் முதியவரிடம் கொடுமையாக வீட்டின் உரிமையாளர் நடந்துவிட்டதாக அதில் குறிப்பிட்டு இருந்தார். அப்போது தான் அந்த செய்தி வெளியுலகுக்கு பரவியது.

வறுமையால் வாடி வாடகை செலுத்த முடியாமல் தவித்தவர் சாதாரண முதியவர் அல்ல அவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்று. உடனே அரசு அதிகாரிகள் அங்கு சென்று நந்தாவுக்கு ஏற்பட்ட நிலைமை அறிந்து ஆறுதல் கூறினார்கள். அவர் கௌரவமாக வாழ்வதற்கு ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த வீட்டின் உரிமையாளரும் தான் அறியாமல் தவறு செய்து விட்டதாக நந்தாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படி தனது வாழ்நாளின் இறுதிவரை உண்மையான காந்தியவாதியாகவே இருந்த நந்தா 1998-ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தனது 99 வது வயதில் இயற்கை எய்தினார்.

இன்று சாதாரண உள்ளாட்சி அமைப்பில் கவுன்சிலராக இருப்பவர்கள் கூட கார், பங்களா, பகட்டான ஆடை என அரசியலுக்கு வந்ததும் மாறிவிடும் போது இந்தியாவில் இப்படியும் ஒரு பிரதமர் இருந்தார் என்பது நமக்கு ஆச்சரியமான செய்திதானே.

Tags

Next Story