ஏப்ரல் மாதம் 14ம் தேதி 14 வது குழந்தையாக பிறந்தவர் அம்பேத்கர் தெரியுமா
ராம்ஜி சக்பால் - பீம்பாய் இணையருக்கு 14 வது குழந்தையாக பிறந்தார் அம்பேத்கர்.மத்திய பிரதேசத்தில் உள்ள 'மோ' என்ற இடத்தில் 1891,ஏப்ரல் 14 இல் பிறந்தார். இவருடைய தந்தை ராம்ஜியும், பாட்டனாரும் ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள். இவர்களுடைய குடும்பத்திற்கு ராணுவ பின்னணி உண்டு.இவர்கள் வசிக்கும் 'மோ' என்ற இடமே ராணுவ தலைமையிடமாகும்.
தனது ஐந்தாம் வயதில் உள்ளூரில் உள்ள மராத்தி பள்ளிக்கு அனுப்பப்பட்டார். பின்னர் சதாராவில் உயர்நிலை பள்ளியில் படித்தார்.இவரது பள்ளி ஏட்டில் அவர் பெயர் 'பீமா ராம்ஜி அம்பாவடேகர்' ஆகும்.அக்காலத்தில் தீண்டாமை எங்கும் நிறைந்திருந்தது.மற்ற மாணவர்களிடம் இருந்து தனியே உட்காரவைக்கப்பட்டர்.அங்கிருந்த சம்ஸ்கிருத ஆசிரியர் தெய்வீக மொழியை கற்பதற்கு தீண்டத்தகாதவர்கள் அருகதையற்றவர்கள் என்று கூறி சமஸ்கிருதத்தை கற்று கொடுக்க மறுத்துவிட்டார்.
1904 இல் அம்பேத்கர் குடும்பம் பம்பாயில் குடியேறினர்.பரேலில் உள்ள பள்ளியிலும்,அதன் பிறகு எல்பின்ஸ்டன் பள்ளியிலும் படித்து,1907 இல் பள்ளிப்படிப்பை முடித்தார்.தனது ஐந்தாம் படிவத்திலேயே திருமணம் செய்து கொண்டார்.அப்பொழுது மணப்பெண் ராமாபாய்க்கு 9 வயது.
'பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்' என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேவாமேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார். இது ஒரு சாரரின் கருத்து.
ஆனால் இந்த கருத்து முற்றிலும் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. ஏனெனில் இந்தியாவில் எந்தவொரு பிராமணருக்கும் இத்தகைய குடும்ப பெயர் இல்லை. மேலும் இது தங்களின் சமூகத்திற்கு பெருமையை சேர்த்து கொள்ள அவர்கள் செய்து கொண்ட ஒரு போலி இடைச்செருகல் என்பதே பலரின் குற்றசாட்டு. இவர் அம்பவாடே என்னும் கிராமத்தில் பிறந்ததால் இவரை அம்பவாடேகர் என்று முதலில் அழைத்தனர். பின்னர் அதுவே அம்பேத்கர் என்றானது என்பது ஒரு சாரரின் கருத்து.
மன்னர் மஹாராஜா சாயாஜிரால் கெய்க்வாடால் அளிக்கப்பெற்ற மாத உதவி தொகையான ரூபாய் 25னை கொண்டு,தன் கல்லூரி படிப்பை எல்பின்ஸ்டனில் தொடர்ந்தார்.அக்காலத்தில் இழிவுபடுத்துதல் எங்கும் காணப்பட்டது.உணவகங்களில் தேனீர்,நீர் மறுக்கப்பட்டன. கல்லூரி படிக்கும் காலத்திலேயே அம்பேத்கரின் தந்தை இறந்தார்.இது அவரது மனதை வெகுவாக பாதித்தது.பட்டய படிப்புக்கு பிறகு,பரோடாவில் அரசுபணியை ஏற்றார்.உயர்பணிகளில் உயர் வகுப்பினருடன் தானும் அதில் இணையாக இருப்பதை உணர்ந்து கொண்டார்.
நாளொன்றுக்கு 18 மணி நேரம் வரை படித்தார் அம்பேத்கர்.அவர் எழுதிய 'இந்தியாவில் ஜாதிகளின் தொடக்கம்' என்ற ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார்.அதற்கு முன்னதாக 'பண்டைய இந்திய வணிகம்' என்ற கட்டுரைக்காக எம்.ஏ பட்டம் பெற்றார்.'இந்தியாவுக்கான தேசிய லாப பங்கு','ஒரு வரலாற்று பகுப்பாராய்வு' போன்ற கட்டுரைகளை முனைவர் பட்டத்திற்காக வெளியிட்டார்.
'லண்டன் பொருளாதார அரசியலறிவு பள்ளிக்கு ஒரு பட்டதாரி மாணவனாக சென்றார்.பரோடா மன்னர் உதவித்தொகை நிறுத்திவிட்டதால்,அவருடைய எம்.எஸ். சி ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.அதன் பிறகு பரோடா மன்னரிடம் படைத்துறை தலைவாரக பணியாற்றினார்
பின்னர் பம்பாய் வந்து,மாணவர்களுக்கு கல்வியளிக்க தொடங்கியதோடு,பங்கு பத்திரங்களில் அறிவுரை வழங்க ஒரு நிறுவனத்தையும் தொடங்கினார்.ஆனால் 'ஒரு தீண்டதகாதவனிடம் அறிவுரைக்கு செல்வதா ? ' என்ற எண்ணத்தில் வாடிக்கையாளர்கள் வரவில்லை.இதனால் அம்பேத்கர் தனது ஆசிரியர் பணியில் கவனம் செலுத்த தொடங்கினார்.
இவரது உரையை கேட்பதற்கென்றே மாணவர்கள் திரண்டனர்.அப்போதும் சமுதாயத்தில் சிறுமைப்படும் நிலையில் மாற்றம் ஏதும் இல்லை.ஏனென்றால் ஆசிரியர்களுக்கான அறையில் இருந்த பானையில் இருந்து நீர் பருக அவரை அனுமதிக்கவில்லை.1920 மார்ச்சில் பொருளாதார சட்டகல்வியை தொடர இப்பதவியை துறந்தார்.கோலாப்பூர் மன்னர் அம்பேத்கருக்கு மாபெரும் பொருள் உதவியை செய்தார்.தன் உணவையையும் துறந்து முன்பை விட கடுமையாக உழைத்தார்.அவரது மனைவி 'பிறரிடமிருந்து உதவி பெறுவதை மதிப்பு குறைவாக கருதி,நிதி நிலைமையை சீர் செய்வதற்கு தன் நகைகளை விற்றார்' அவர்.
'பிரிட்டிஷ் இந்தியாவில் நிதி நிர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளித்தல்' (எம்.எஸ். சி),'ரூபாயின் சிக்கல்-அதன் தொடக்கமும்,தீர்வுகளும்' (டி.எஸ். சி) போன்ற ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு பட்டங்களை பெற்றார்.1947இல் மேற்கண்ட கட்டுரையை 'இந்திய நாணயம்-வங்கி வரலாறு' என்ற தலைப்பில் மறுபதிப்பினை மேற்கொண்டார் அம்பேத்கர்.
அம்பேத்கர் 1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.
1.கிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company).
2.பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)
3.ருபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்
கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது
1923 இல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் சேர்க்கப்பட்டார்.வாதிடும் தொழிலை ஏற்றாலும்,தீண்டாமை என்ற களங்கம் அவரை பின் தொடர்ந்துவந்தது.இதனால்,முக்கியத்துவம் இல்லாத பிற வேலைகளையே செய்து வந்தார்.கணக்கியல் நிலையத்தில் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றி தன் வருமானத்தை பெருக்கி கொண்டார்.1924 ஜூலை 9இல் தாமோதர் கூடத்தில் ஒடுக்கப்பட்ட இன மக்களின் நிலையின் மீதான கவனத்தை ஈர்க்க ஒரு பொதுக்கூட்டம் கூட்டினார்.இதனை அனைவரும் வரவேற்றனர்.
1927இல் 'பகிஸ்கரிக் பாரத்' என்ற இதழை தொடங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்,குறைகளுக்காக குரல் கொடுக்கவும் இதனை உருவாக்கினார் அம்பேத்கர்.ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நிலையை உயர்த்த கல்வியே சிறந்த கருவியென கருதினார்.குறிப்பாக மேல்நிலை கல்வியை பெறுவதன் வாயிலாக மட்டுமே,சமூக பொருளாதார சமத்துவம் கைகூடும் என்று அம்பேத்கர் கருதினார்.
1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்' என்று கூறிச் சென்றார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்' ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.
1935 அக்டோபர் 13 இல் நடத்தப்பட்ட 'ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மாநில மாநாட்டில்' கலந்து கொண்டார்.அதில் 'நான் இந்துவாக பிறந்தேன்,ஆனால் இந்துவாகவே இறக்கமாட்டேன்' என்ற புகழ்பெற்ற தீர்மானத்தை கொண்டுவந்தார் அம்பேத்கர்.
நீண்ட காலமாக புத்த மதத்தை தழுவ வேண்டும் என்ற அம்பேத்கரின் உந்துதல் உறுதிபட தொடங்கியது எனலாம்.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார்.
இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.பல புத்த பிக்குகளின் கூட்டங்களில் தன்னை தொடர்புபடுத்தி கொண்டார் அம்பேத்கர்.1949 இல் காத்மாண்டுவில் நடந்த உலக புத்த மாநாட்டில் கலந்து கொண்டு 'புத்த மதம்,மார்க்சிசம் ஆகிய இரண்டின் நிறைகளையும்,குறைகளையும் ஒப்பிட்டு முதலில் கூறிய மதத்தின் மேன்மையை அறிவித்து இரண்டையும் ஒப்புமைப்படுத்தி காட்டினார்.
அதன் பிறகு, 1950இல் நடந்த உலக புத்த மாநாட்டிற்கு சென்றார்.1951இல் 'புத்த உபாசன பந்தா' என்ற நூலை வெளியிட்டார்.1954இல் நடந்த உலக புத்த மாநாட்டிற்கு இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டார்.1955இல் 'பாரதீய புத்த பேரவையை அமைத்தார்.1956 அக்டோபர் 14இல் நாகபுரியில் இந்து மதத்தை துறந்து,புத்த மதத்தில் முறைபடியாக சேர்ந்தார்.1956 இல் நடந்த உலக புத்த மாநாட்டில் 'நவீன புத்தர்' என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்
இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது, அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.
அம்பேத்கரின் இறுதி நாட்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.பிறர் உதவியின்றி சிறு அசைவை கூட தானாக செய்ய முடியாத நிலையை அடைந்தார் அம்பேத்கர்.பிராணவாயு அவர் அருகில் எப்போதும் இருக்கும்.இதனால் அவருடைய ஆதரவாளர்கள் அச்சமடைவார்கள் என்ற காரணத்தால் வெளியில் யாருக்கும் இதனை பற்றி சொல்லப்படவில்லை.இத்தகைய உடல்நல கேட்டிற்கிடையே அவர் 'புத்தரும் அவர் தர்மமும்' என்ற நூலை எழுதினார். அவரது மறைவிற்கு பிறகு வெளியிடப்பட்டது.
1956 டிசம்பர் 6ஆம் தேதி மரணமடைந்தார் அம்பேத்கர்.மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது. மாபெரும் வரலாரானது முடிவுற்றது.அம்பேத்கர் போன்ற வரலாற்று மாமேதைகள் இறப்பிற்கு பிறகும் வாழ்கிறார்கள்.
"காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தாழ்த்தப்பட்டவர்கள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது" என்று கூறினார்.
இந்திய குடியரசை உறுதிப்படுத்தும் திட்டங்கள் மற்றும் ,செயல்முறைகளை கொண்டு வரவும்,இந்திய குடியரசு அமைப்பை பலப்படுத்தவும் 'குடியரசு கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டார் அம்பேத்கர்.அரசியல் பணியில் ஈடுபட எண்ணுவோர்க்கு ஒரு பயிற்சி பள்ளியை துவக்கும் ஒரு புதுமையான திட்டமும் கூட அவரிடம் இருந்தது.உடல் நிலை கேடடைந்து வந்ததால் அவரால் செயல் பட முடியவில்லை.
இந்தியாவின் தலை சிறந்த எழுத்தாளர்களில் காந்திஜி,நேருஜி, சீனிவாச சாஷ்திரி ஆகிய வரிசையில் அம்பேத்கரும் இணையவேண்டியவர்.ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது,இந்திய சமுதாயத்தின் சமூகவியலில் ஏன்? எப்படி? எதனால்? என இது போன்ற கருத்துக்களை வெளியிட்டு கலங்கரை விளக்கமாக இன்று மட்டும் இல்லாமல்,என்றும் நிற்பவர் "அம்பேத்கர்" வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்" என்று அம்பேத்கர் கூறியது வெறும் வாய்வழியாக மட்டும் சொல்லவில்லை,அதனை தன் வாழ்வில் சாதித்தும் காட்டியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu