டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை: ஆறுகளான சாலைகள்

டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை: ஆறுகளான சாலைகள்
41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. நிவாரண பணியில் ஈடுபடுவதற்காக, அரசு அதிகாரிகளுக்கு ஞாயிறு விடுமுறை ரத்து செய்யப்பட்டது.

டெல்லி உள்ளிட்ட வடமேற்கு இந்திய மாநிலங்களில் நேற்று முன்தினம் மிக பலத்த மழை பெய்தது. நடப்பு மழைப்பருவத்தில் முதலாவது மிக பலத்த மழை இதுவே ஆகும். மழையால் டெல்லி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆக்கிரமிப்புகள், மழைநீர் கால்வாய்கள் பராமரிப்பின்மை காரணமாக, தண்ணீர் வெளியேற வழியின்றி நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.

மக்கள், முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்றனர். பல இடங்களில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இணையதள சேவை முடங்கியது. பலத்த மழையால் பல இடங்களில் வீடு இடிந்து விழுந்தன.

ஜாகிரா என்ற இடத்தில், ஒரு தகர கூடாரம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி தவித்த 2 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மேலும் வேறு யாராவது சிக்கி இருக்கிறார்களா என்று அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 153 மி.மீ. மழை பெய்ததாக டெல்லி சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகி உள்ளது. கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரே நாளில் 169 மி.மீ. மழை பெய்தது. அதன்பிறகு கடந்த 41 ஆண்டுகளில் இதுதான் ஜூலை மாதத்தின் அதிகபட்ச மழை ஆகும்.

கடந்த 1958-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி பெய்த 266 மி.மீ. மழைதான் எல்லா காலத்திலும் அதிகபட்ச மழை ஆகும். அதன்பிறகு நேற்று பதிவான மழை அளவு, ஜூலை மாதங்களில் 3-வது அதிகபட்ச மழை அளவாகும்.

வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி மட்டுமின்றி, காஷ்மீர், இமாசலபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் இன்றுவரை மழை நீடிக்கும் என்று கூறியுள்ளது.

யமுனை நதியில் நேற்று பகல் 1 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 203.18 மீட்டராக இருந்தது. நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 1 மணிக்குள், அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டும் என்று மத்திய தண்ணீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, மழை தொடர்பான நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக, டெல்லி அரசு அதிகாரிகள் அனைவருக்கும் நேற்று விடுமுறையை ரத்து செய்தது, அரசு அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லுமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில், ஒவ்வொரு பருவமழை காலத்திலும் டெல்லியில் பெய்யும் மொத்த மழை அளவில் 15 சதவீத மழை, வெறும் 12 மணி நேரத்தில் பெய்துள்ளது. இதனால் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி அரசின் மந்திரிகளும், மேயர் ஷெல்லி ஓபராயும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்கிறார்கள். அனைத்து அரசு அதிகாரிகளும் களத்தில் நிற்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் ஞாயிறு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இமாசலபிரதேசத்திலும் நேற்று முன்தினமும், நேற்றும் மழை கொட்டியது. கடந்த 36 மணி நேரத்தில், 13 நிலச்சரிவு சம்பவங்களும், 9 திடீர் வெள்ளப்பெருக்கு சம்பவங்களும் ஏற்பட்டன.

சிம்லா மாவட்டம் கோத்கார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஒரு வீடு இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

குல்லு நகர் அருகே நிலச்சரிவால் ஒரு தற்காலிக வீடு இடிந்ததில், ஒரு பெண் உயிரிழந்தார். சம்பா மாவட்டத்தில் நிலச்சரிவால் உயிருடன் புதைந்து ஒருவர் உயிரிழந்தார்.

பலத்த மழையால், 1,743 டிரான்ஸ்பார்மர்கள், 138 குடிநீர் சப்ளை திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை முடங்கியது. மணாலி-சண்டிகார் சாலையில் பிளவு ஏற்பட்டது. மணாலியில் கடைகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

ரவி, பியாஸ், சட்லஜ், செனாப் ஆகிய முக்கிய நதிகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் ஓடுகிறது. கனமழையின்போது பயணத்தை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

நிலச்சரிவு காரணமாக சிம்லா-கல்கா இடையே அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிராம்பு-சோட்டா தாரா இடையே நிலச்சரிவால் 30 கல்லூரி மாணவர்கள் நடுவழியில் சிக்கி தவித்தனர்.

அரியானா மாநிலம் அம்பாலாவில் 224 மி.மீ. மழையும், சண்டிகாரில் 322 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

இதுபோல், உத்தரகாண்ட் மாநிலத்திலும் பலத்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மழை மற்றும் நிலச்சரிவால் 5 பேர் பலியானார்கள்.

மாநிலம் முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கங்கை உள்பட முக்கிய நதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், வெளிமாநில பக்தர்கள் வானிலை அறிக்கையை கவனித்து, புனித பயணத்தை திட்டமிடுமாறும் முதலமைச்சர் தாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேதார்நாத்தில் இருந்து 11 பக்தர்களுடன் சென்ற ஒரு ஜீப், கங்கை ஆற்றில் விழுந்தது. மாநில பேரிடர் மீட்பு படையினர், 5 பக்தர்களை உயிருடன் மீட்டனர். 3 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது. இதற்கிடையே, மழை பாதிப்பு குறித்து டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பாதிப்பு விவரத்தை கேட்டறிந்தார்.

அதுபோல், காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்காவிடமும் பேசினார். காஷ்மீரில் மழை பாதிப்பு விவரங்களையும், அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது பற்றியும் கேட்டறிந்தார்.

இதற்கிடையே, பலத்த மழை நீடித்து வருவதால், டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமர்நாத் யாத்திரை மூன்று நாட்கள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை பஞ்சதர்னி மற்றும் ஷேஷ்நாக் அடிப்படை முகாம்களில் இருந்து மீண்டும் தொடங்கியது.

கனமழை காரணமாக குர்கான் மற்றும் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கார்ப்பரேட் நிறுவனங்களும் இன்று வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு குர்கான் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து ஹரியானா யமுனை ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி நீரை திறந்துவிட்டதையடுத்து, வெள்ளம் பாதித்த பகுதிகளை கண்காணிக்க டெல்லி அரசு 16 கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது.

Tags

Next Story