டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையால் கைது

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. விசாரணைக்காக கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஒரே ஒரு சம்மனுக்கு கூட பதிலளிக்கவில்லை. நேரில் ஆஜரானால் கைது உறுதி என்பது தெரிந்த விஷயம்தான். எனவே, ஆஜராவதை தவிர்த்து வந்தார். அதே நேரம், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தையும் நாடியிருந்தார். அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்ப தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனையடுத்து இன்று புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டோம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் கெஜ்ரிவாலின் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனையடுத்து கையில் கைது வாரண்ட்டுடன் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டை மேற்கொண்டனர். எனவே, உச்சநீதிமன்றத்தை அரவிந்த் கெஜ்ரிவால் நாடியிருந்தார். இந்நிலையில் இன்று இரவு அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவரது கைது நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பாசிச பாஜகவின் கொடுங்கோல் செயல்" என கண்டித்திருக்கிறார். இது தொடர்பான தனது x தளத்தில், "2024 தேர்தல்களுக்கு முன்னதாக, தோல்வி பயத்தால் சகோதரர் ஹேமந்த் சோரனை அநியாயமாகக் குறிவைத்ததைத் தொடர்ந்து, தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த கைது நடவடிக்கையின் மூலமை் பாசிச பாஜக அரசு வெறுக்கத்தக்க ஆழத்தில் மூழ்க தொடங்கியுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் சீரழிவு போன்ற புகாரில் இதுவரை ஒரேயொரு பாஜக தலைவர் கூட விசாரணையையோ அல்லது கைது செய்வதையோ எதிர்கொள்ளவில்லை. ஆனால் அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை இடைவிடாமல் பாஜக துன்புறுத்தி வருகிறது. இந்த கொடுங்கோன்மை பொதுமக்களின் கோபத்தை தூண்டியுள்ளது, பாஜகவின் உண்மையான நிறத்தை வெளி கொண்டு வந்துள்ளது. பாஜவின் இந்த நடவடிக்கைள் இந்திய கூட்டணியின் வெற்றிப் பயணத்தை பலப்படுத்தியுள்ளன. மக்களின் கோபத்துக்கு ஆளான பாஜக என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu