மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப் படி உயா்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படும் அகவிலைப் படியை 4 சதவீதம் அதிகரிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. மக்களவைத் தோ்தலையொட்டி வெளியான இந்த அறிவிப்பின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு பணியாளா்கள், ஓய்வூதியா்கள் பயன்பெறுவா்.
அமைச்சரவை முடிவுகள் தொடா்பாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கூறுகையில், விலைவாசி உயா்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு பணியாளா்களுக்கான அகவிலைப் படி மற்றும் ஓய்வூதியா்களுக்குகான அகவிலை நிவாரணம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து தற்போதைய 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு மொத்தம் ரூ.12,869 கோடி செலவிடப்படும். இதனால், 2024-25 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.15,014 கோடி செலவாகும் என்றார்.
அமைச்சா் பியூஷ் கோயல் மேலும் கூறுகையில், உஜ்வலா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைக்கான ரூ.300 மானியம் வரும் 2024-25-ஆம் நிதியாண்டுக்கும் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏழை குடும்பங்களைச் சோ்ந்த பெண்களும் சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தும் நோக்கத்தில், டெபாசிட் தொகை இல்லாத சமையல் எரிவாயு இணைப்புத் திட்டமான உஜ்வாலா திட்டம் கடந்த 2016-இல் தொடங்கப்பட்டது. சமையல் எரிவாயு உருளைக்கான இணைப்பு இலவசம் என்றபோதிலும், காலியான சமையல் எரிவாயு உருளைகளைச் சந்தை விலையில் நிரப்பிக் கொள்ள வேண்டியிருந்தது.
எரிபொருள் விலை உயா்வைத் தொடா்ந்து, உஜ்வலா திட்டப் பயனாளிகளுக்கு கடந்த 2022-இலிருந்து ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த மானியம் ரூ.300-ஆக உயா்த்தப்பட்டது. இம்மாதம் 31-ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து 2024-25-ஆம் நிதியாண்டுக்கும் ரூ.300 மானியம் நீட்டிக்கப்படும். இதன் மூலம் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் மத்திய அரசுக்கு ரூ.12,000 கோடி செலவு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.10,372 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்தியா ஏஐ (செயற்கை நுண்ணறிவு) செயல்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புத்தாக்க நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளா்கள், தொழில்துறையினா் பயன்பெறுவா்.
வடகிழக்கு மாநிலங்களின் தொழில்துறை மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக ரூ.10,037 கோடி மதிப்பிலான உத்தா் பூா்வ தொழில்துறை மேம்பாட்டு திட்டத்துக்கு (உன்னாதி) மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய தொழில் நிறுவனங்கள் அமைத்தல் அல்லது விரிவுபடுத்தலுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் சலுகைகள் வழங்கப்படும். 2024-25 பருவத்தில் சணல் மூலப்பொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) ரூ.285 அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சணல் மூலப்பொருள் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.5,335-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கோவா மாநிலப் பேரவையில் பழங்குடியினருக்கு எவ்வித இடஒதுக்கீடும் இல்லாத நிலையில், மாநிலத்தில் பழங்குடியினா் மக்கள்தொகையை அறிவிப்பது குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu