சிங்கங்களின் சர்ச்சைக்குரிய அக்பர், சீதா பெயர்களை மாற்ற கோர்ட் உத்தரவு

சிங்கங்களின் சர்ச்சைக்குரிய அக்பர், சீதா பெயர்களை மாற்ற கோர்ட் உத்தரவு

ஜோடியாக அக்பர், சீதா சிங்கங்கள்.

சிங்கங்களின் சர்ச்சைக்குரிய அக்பர், சீதா பெயர்களை மாற்ற கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவுக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட அக்பர், சீதா என பெயரிடப்பட்ட சிங்கங்களின் பெயரை மாற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014க்கு பிறகு, அதாவது மத்தியில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாடு முழுவதும் மத கலவரங்கள், சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை வலுவாக்கும் வகையில், அவ்வப்போது சில சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த வரிசையில் மற்றொரு சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திரிபுராவின் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12ம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சிங்கங்களுக்கு ஏற்கெனவே அக்பர், சீதா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஆனால், சிங்கங்களின் பெயரை மாற்ற வேண்டும் என்று விஷ்வ இந்து பர்ஷத் (விஎச்பி) அமைப்பினர் அம்மாநில உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்

அக்பர் முகலாய பேரரசராக இருந்தாலும், சீதா என்பவர் புராண இதிகாசங்களில் வரும் பெண் தெய்வமாக போற்றப்படுகிறார். இப்படி இருக்கும்போது இரண்டு சிங்கங்களையும் எப்படி ஒன்றாக விட முடியும்?" என்று கேள்வி எழுப்பி, பெண் சிங்கத்தின் பெயரை சீதா என்று இல்லாமல் வேறு பெயரில் மாற்ற வேண்டும் என விஎச்பி அமைப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இது குறித்து விஹெச்பி நிர்வாகி துலால் சந்திர ரே கூறுகையில், "பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிங்கத்திற்கு சீதா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் இந்து மதம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய பெயரை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், எனவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம்" என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் பெங்கால் சஃபாரி பார்க் இயக்குநரும் இணைக்கப்பட்டிருக்கிறார்.

மனு கடந்த 16ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி சவுகதா பட்டாச்சார்ய பட்டியலிட்டார். வழக்கு வரும் கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, "பாசத்தின் அடிப்படையில் சிங்கங்களுக்கு இப்படி பெயர் சூட்டலாம். அதனை எப்படி நீங்கள் அவதூறு என நினைக்கலாம். இது ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து மாறுபடும். சிங்கத்துக்கு சீதா என பெயர் வைப்பதில் உங்களுக்கு என்ன சிரமம் இருக்கிறது" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சீதாவை நாங்கள் தெய்வமாக வழிப்பட்டு வருகிறோம். சிங்கத்துக்கு சீதா என பெயரிட்டது இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. இன்று சிங்கத்துக்கு இப்படி பெயர் வைத்தவர்கள், நாளை கழுதைக்கு ஏதாவது தெய்வத்தின் பெயரை வைக்கலாம். இதனை தடுக்க வேண்டும். மேலும் நாங்கள் சீதாவை வணங்குகிறோம். அவர் கோவிலில்தான் இருக்க வேண்டும். காட்டில் அல்ல" என வாதிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணை பிப்.22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று மீண்டும் விசாரணை தொடங்கிய நிலையில், நீதிபதி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதாவது, "ஆட்சேபனைக்குரிய சீதா, அக்பர் சிங்கங்களின் பெயரை மாற்ற வேண்டும். வன விலங்குகளுக்கு இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மற்றும் தலைவர்களின் பெயர்களை வைக்க வேண்டாம்" என்று சிலிகுரி பூங்கா மற்றும் மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story