ஊழல் இல்லாத ஜனநாயகத்தை தொழில்நுட்பம் சாத்தியமாக்கியுள்ளது: ராஜீவ் சந்திரசேகர்
சிறந்த செயல்திறன் கொண்ட நாடாக நாம் இருக்கும் போதிலும் நமது செயல்திறனைக் காட்டிலும் குறைவாகவே செயலாற்றி உள்ளோம் என்பது பொதுவான கருத்தாக இருந்தது. ஆனால் 2020-21-ம் ஆண்டை பொருத்தவரை இந்தியா குறித்த பல்லாண்டு கால கண்ணோட்டத்தை தொழில்நுட்பம் மாற்றி உள்ளதை நாம் காணமுடியும் என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று கூறினார்.
பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த நீதி வழங்குதலில் சமீபத்திய தொழில்நுட்பம் குறித்த சட்ட தொழில்முறைதாரர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் சிறப்புரையாற்றிய திரு ராஜீவ் சந்திரசேகர், கடந்த ஆறு வருடங்களாக செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் தகுந்த பயனாளிகளுக்கு எந்தவிதமான தாமதமும் இன்றி சென்று சேர்வதை உறுதி செய்வதற்காக தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான கட்டமைப்பில் தற்போதைய அரசு உருவாக்கியுள்ளது என்று கூறினார்.
ஊழல் மற்றும் கசிவுகள் இல்லாத ஜனநாயகத்தை தொழில்நுட்பம் சாத்தியமாக்கியுள்ளது என்று கூறிய அமைச்சர், மறைமுக வரிகளின் வரலாற்றில் மிகப்பெரிய சீர்திருத்தமான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி, கள்ள பொருளாதாரம் காரணமாக இந்தியாவின் வரி வருவாய் வளராது என்ற பல்லாண்டு கால கண்ணோட்டத்தை தகர்த்துள்ளதாக கூறினார். செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நீதி வழங்கலை விரைவுபடுத்தி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
கொரோனா பெருந்தொற்றின் சவால்களை எதிர்கொள்வதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் எடுத்த முயற்சிகளை பாராட்டிய அமைச்சர், தொழில்நுட்பத்தை சரியான சமயத்தில் பயன்படுத்தி காணொலி விசாரணை முறைக்கு மாறி நெருக்கடிக்கு இடையில் நீதி முறையாக வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டதாக கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu