பெங்களூரு செல்பவர்களுக்கு கொரோனா 'நெகட்டிவ்' சான்றிதழ் கட்டாயம்
பெங்களுரு மாநகராட்சி கட்டடம்
கர்நாடகத்தில் கொரோனா முதல் அலையை காட்டிலும் 2-வது அலை கோர தாண்டவமாடியது. நாள் தோறும் பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்து பதிவானது. மேலும் தினமும் 1,000 மேற்பட்டோர் உயிரிழந்து வந்தனர். அதன் பிறகு அரசின் தீவிர நடவடிக்கையாலும், ஊரடங்காலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.
இதனால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா 3-வது அலை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் தினசரி பாதிப்பு 400-க்கும் அதிகமாகவே பதிவாகி வருகிறது.
இது கொரோனா 3-வது அலையின் முன்னோட்டமாக இருக்கலாம் என்று கர்நாடக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோர் கட்டாயம் கொரோனா 'நெகட்டிவ்' சான்றிதழை காட்ட வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா 'நெகட்டிவ்' சான்றிதழ் காட்ட வேண்டும். ஒருவேளை பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் வருபவர்களின் சளி மாதிரி சேகரிக்கப்படும். அதன் முடிவு வரும் வரை அரசின் கண்காணிப்பு முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இதற்காக ஆகும் செலவை அவர்களே ஏற்க வேண்டும். இதற்கான கட்டணத்தை நாங்கள் நிர்ணயம் செய்துள்ளோம்.
பரிசோதனை முடிவில் வைரஸ் தொற்று இல்லை என்று உறுதியானால், அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அத்தகையவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவார்கள். பெங்களூருவில் தற்போது உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் இல்லை. பாதிப்பு அதிகரித்தால், வார இறுதி ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். யாரும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. பெங்களூருவில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் அதிகளவில் கொரோனா பரவி வருகிறது.
அத்திப்பள்ளியில் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு கொரோனா 3-வது அலை பரவி வரும் நிலையில் கேரளா, மராட்டியத்தில் இருந்து கர்நாடகத்திற்கு வருவோருக்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும், கடந்த 72 மணி நேரத்திற்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளது.
தற்போது தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வெளிமாநிலத்தினருக்கு நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது. இதையொட்டி கர்நாடகம்-தமிழ்நாடு எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் தனியாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு, அங்கு ஓசூர் வழியாக வாகனங்களில் வருபவர்களை மருத்துவ குழுவினர் சோதனை நடத்துகிறார்கள். இந்த சோதனையை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu