சமையல் கேஸ் விலை 10 சதவீதம் வரை குறைய வாய்ப்பு?
பைல் படம்.
இந்தியாவில் இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் செய்வதில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக மத்திய எரிவாயு துறையின் அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் ரஷியா போன்ற நாடுகளில் இருந்து எரிவாயு கொள்முதல் செய்வதில் புதிய முறையை பின்பற்ற மத்திய அமைச்சர் சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குழாய் மூலம் கொண்டுவரப்படும் இயற்கை எரிவாயுவின் விலை 10 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது. இதுபோல சி.என்.ஜி. எரிவாயுவின் விலை 6 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அறிவிப்பு வெளியானதும் இந்த உத்தரவு அமலுக்கு வரும். இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்த முடிவின்படி எவ்வளவு இணைக்கப்படும் என்பது மாதாந்திர பயன்பாட்டின் அடிப்படையில் முடிவு செய்யப்பட உள்ளது. இதுபோல தற்போதைய முதன்மை எரிசக்தி பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்கை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 6.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இனி வரும் நாட்களில் இயற்கை எரிவாயுவின் விலை கணிசமான அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது.
புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்போது இயற்கை எரிவாயுவை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது ஏற்படும் இழப்புகள் குறைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதுபோன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும்போது நுகர்வோருக்கு விலையை குறைத்து கொடுக்க வாய்ப்பு ஏற்படும். உலக நாடுகள் இடையே இயற்கை எரிவாயுவின் விலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில் தான் இந்தியாவிலும் இயற்கை எரிவாயுவின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையை மாற்றவும் இயற்கை எரிவாயு துறை முடிவு செய்துள்ளது, அதன்படி பழைய முறைக்கு பதில் புதிய முறைப்படி மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு செய்யும்போது இனி வரும் ஆண்டுகளில் கேஸ் விலை கணிசமாக குறையும் என்றும் இதன்மூலம் உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் பலன் அடைவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ஹர்தீப் பூரி டுவிட்டரில் வெளியிட்ட கருத்தில், சர்வதேச எரிவாயு விலை உயர்வின் தாக்கத்தை இந்தியாவில் எரிவாயு விலையை குறைப்பதன் மூலம் எரிவாயு நுகர்வோரின் நலனை பாதுகாக்க பிரதமர் மோடி தலைமையில் எடுக்கப்பட்ட முயற்சி வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu