சர்ச்சைக்குரிய விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

சர்ச்சைக்குரிய விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்
X
அவதூறான தலைப்புகள் மற்றும் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் -தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

அவதூறான தலைப்புகள் மற்றும் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்' என்று தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு கடுமையான அறிவுறுத்தலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, 'உக்ரைன்-ரஷியா போர் மற்றும் டெல்லி கலவரம் தொடா்பாக சில தனியார் தொலைக்காட்சி சேனல்கள் இதுபோன்ற தலைப்புகளையும், விவாதங்களையும் நடத்தியதாகவும், கேபிள் தொலைத்தொடா்பு ஒழுங்குமுறைச் சட்டம் 1995 விதிமுறைகளுக்கு எதிரான இதுபோன்ற ஒளிபரப்புகளை உடனடியாகத் தவிர்க்க வேண்டும்' என்று அந்த அறிவுறுத்தலில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலில் மேலும் கூறியிருப்பதாவது:

சில தனியார் தொலைக்காட்சி சேனல்கள் உக்ரைன்-ரஷியா போர் தொடா்பாக உறுதிப்படுத்தப்படாத தவறான தகவல்களையும், விவாதங்களையும் ஒளிபரப்பி வருகின்றன. குறிப்பாக, 'அணு ஆயுத புதின் குறித்து ஸெலென்ஸ்கி கவலையடைந்துள்ளார்', 'அணு ஆயுத நடவடிக்கை அபாயத்தால் மன அழுத்தத்துக்கு தள்ளப்பட்டிருக்கும் ஸெலென்ஸ்கி' என்பன போன்ற அவதூறான தலைப்புகள் ஒளிபரப்பப்படுகின்றன.

மேலும், சா்வதேச செய்தி நிறுவனங்களை மேற்கோள்காட்டி, 'மூன்றாம் உலகப் போர் ஏற்கெனவே தொடங்கிவிட்டது' என்பன உள்ளிட்ட செய்திக்கு முற்றிலும் தொடா்பில்லாத அவதூறான தலைப்புகள் மற்றும் ஒருவரிச் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன.

அதுபோல, டெல்லி வன்முறை தொடா்பாக ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலான வார்த்தைகளில் தொலைக்காட்சி சேனல் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், இந்த வன்முறை தொடா்பாக குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த ஒரு நபா் நீண்ட வாளை கையில் ஏந்தியுள்ளதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத காணொலியை தொடா்ச்சியாக ஒளிபரப்புகின்றன.

அதோடு, 'டெல்லியில் மத ஊா்வலத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முன்னரே திட்டமிட்டு நடத்தப்பட்டது' என்றும் செய்தி ஒளிபரப்பப்படுகிறது. 'கண்ணியத்துக்கு எதிரான மற்றும் நட்பு நாடுகளை விமா்சிக்கும் வகையிலான செய்திகள், மதங்கள் அல்லது சமூகங்கள் மீது தாக்குதலை தொடுக்கும் வகையிலான கருத்துகளை உள்ளடக்கிய தகவல்களை ஒளிபரப்பக் கூடாது' என்று கேபிள் தொலைத்தொடா்பு ஒழுங்குமுறைச் சட்டம் 1995-இன் பிரிவு 6 குறிப்பிடுகிறது.

இந்த சட்ட நடைமுறைகளுக்கு எதிரான கருத்துகள் மற்றும் செய்திகள் ஒளிபரப்பப்படுவதை தொலைக்காட்சி சேனல்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!