சென்னையில் ஜன.8-ம்தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம்
2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வருகிறது. அக்கட்சி 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து 2 வது முறையாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்து வருகிறது. இந்த அரசின் பதவி காலம் ஜூன் 16 தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
தற்போதே தேர்தல் பணியில், ஆளும் கட்சி பாஜகவும், எதிர்க்கட்சிகளும் இறங்கிவிட்டன. 3 வது முறையாக தேர்தலில் வென்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா அல்லது 'இந்தியா' கூட்டணி வென்று பா.ஜ.க.விடம் ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. அரசியல் கட்சிகள் ஒருபக்கம் சென்றுகொண்டு இருக்க, தேர்தலை நடத்த உள்ள தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் முழு வீச்சில் இறங்கி இருக்கிறது.
18 வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், மார்ச் இறுதியில் தேர்தல் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் சென்னையில் நடத்த முடிவு செய்து உள்ளது. ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் சென்னைக்கு வருகை தர உள்ளார்கள்.
இந்த கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள், தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை கண்காணிப்பார். இறுதி வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை ஜனவரி 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். இதில் 272 என்ற பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெறும் கூட்டணி ஆட்சியமைக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu