குடியரசு தலைவர் வேட்பாளர்: மம்தா நடத்தும் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசு தலைவவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பாஜக களம் இறங்கி உள்ளது. கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாஜக, மத்திய அரசு இனி வரும் காலங்களில் கொண்டு வரும் முக்கிய மசோதாக்களை ஒருமனதாக ஏற்கும் வகையில் தங்களுடன் ஒத்த கொள்கை கொண்டவரை குடியரசு தலைவராக்க நியமிக்க திட்டமிட்டு இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி இன்னும் குடியரசு தலைவர் தேர்தலுக்கு முழுமையாக தயாராகவில்லை. அமலாக்கத்துறை விசாரணை, உட்கட்சிப் பூசல் போன்றவற்றால் அக்கட்சி இதில் முழு கவனம் செலுத்தவில்லை என தெரிகிறது. அதே சமயம் இதுகுறித்து டெல்லியில் 15 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவரும் முதல்வர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்களுக்கு குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். தனது கடிதத்தில் ஜூன் 15 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.
நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் தங்கள் கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் அறிவித்து இருக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu