ஜனவரியில் 99.73 மில்லியன் டன் எட்டிய நிலக்கரி உற்பத்தி

பைல் படம்
நிலக்கரி அமைச்சகம் 2024 ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து, 99.73 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே மாதத்தின் 90.42 மில்லியன் டன் என்ற அளவை விஞ்சியது. இது 10.30% அதிகரிப்பைக் குறிக்கிறது.
கோல் இந்தியா லிமிடெட் உற்பத்தி 2024 ஜனவரி மாதத்தில் 78.41 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது, இது 2023 ஜனவரியில் 71.88 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 9.09% வளர்ச்சியைக் குறிக்கிறது. ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி (ஜனவரி 2024 வரை) 2024 நிதியாண்டில் 784.11 மில்லியன் டன் உற்பத்தியைக் கண்டுள்ளது. இது நிதியாண்டு 22-23-ன் இதே காலகட்டத்தில் 698.99 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது, 12.18% வளர்ச்சியாகும்.
நிலக்கரி அனுப்புதல் ஜனவரி 2024 இல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டு, 87.37 மில்லியன் டன்னைத் தொட்டது. ஜனவரி 2023-ல் பதிவு செய்யப்பட்ட 82.02 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது, 6.52% வளர்ச்சி விகிதத்துடன். அதே நேரத்தில், கோல் இந்தியா லிமிடெட் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியது, ஜனவரி 2023-ல் 64.45 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது, ஜனவரி 2024-ல் 67.56 மில்லியன் டன் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதில் நிலக்கரித் துறையின் மீள்திறனையும், உறுதிப்பாட்டையும் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. நிலக்கரி அமைச்சகம் நிலக்கரித் துறையில் நீடித்த வளர்ச்சி மற்றும் செயல்திறனை ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளது.
நிலக்கரி போக்குவரத்தை மேம்படுத்த 14 ரயில் திட்டங்கள்
அதிகரித்து வரும் தேவைகளுக்கு இடையே நிலக்கரி போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண நிலக்கரி தளவாடக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த நிலக்கரி விநியோகத் திட்டத்தை நிலக்கரி அமைச்சகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ரயில் பாதைகளை அமைத்தல், ரயில்வே கட்டமைப்பின் திறனை அதிகரித்தல், ரயில் இணைப்புத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் நிலக்கரி போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விநியோக வசதிகள் / உள்கட்டமைப்புகள் நாட்டின் நீண்டகால உற்பத்தித் திறன் கணிப்புகளுக்கு ஏற்ப திட்டமிடப்பட்டுள்ளன.
நிலக்கரியை வெளிக்கொணர்வதை மேம்படுத்த 14 ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவற்றில் ஐந்து ரயில் பாதைகள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மற்றவை பல்வேறு கட்டுமானப் பணிகளில் உள்ளன.
இவை தவிர, பசுமை எரிசக்தி வழித்தடத் திட்டங்கள், அதிக அடர்த்தி கொண்ட கட்டமைப்புத் திட்டங்கள், ரயில் சாகர் திட்டங்கள் ஆகியவற்றின் கீழ் பல ரயில் திட்டங்களை ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, நிலக்கரியை விநியோகிப்பதற்காக கடலோர கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி, சுரங்கங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu