திரைப்படங்கள் நீதியையும், தேசப்பக்தியையும் ஊட்ட வேண்டும் -குடியரசு துணைத்தலைவர்
புதுதில்லியில் இன்று, பிரபல திரைப்பட இயக்குநர், ராகுல் ராவைல் எழுதிய ‘ராஜ்கபூர்: பணியில் சிறந்தவர்’ என்ற நூலை வெளியிட்ட குடியரசு துணைத்தலைவர்.
நல்ல திரைப்படத்தின் நோக்கம் வெறும் பொழுதுபோக்கு அல்ல என்று குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். இளைஞர்களிடையே நெறிமுறைகளின் உணர்வையும், நீதியையும், தேசபக்தியையும், மனிதாபிமானத்தையும் ஊட்டுவதாக திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்களை அவர் வலியுறுத்தினார்.
புதுதில்லியில் இன்று, பிரபல திரைப்பட இயக்குநர், ராகுல் ராவைல் எழுதிய 'ராஜ்கபூர்: பணியில் சிறந்தவர்' என்ற நூலை வெளியிட்டபின் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், திரைப்படம் என்பது உயர்ந்த நோக்கம் கொண்ட சாதனமாக இருக்க வேண்டும் என்றும் சாதியம், ஊழல், பாலினப்பாகுபாடு, குற்றச்செயல்கள், போன்ற சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராட நமது இளைஞர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும், மாண்புகள் வீழ்ச்சி அடையும் நிலையில், மக்கள் நலனில் மாபெரும் அக்கறையுடன் தரத்தைப் பராமரிப்பது அரசியல்வாதிகள், ஊடகம், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பெரும் பொறுப்பாகும் என்று வெங்கய்யாநாயுடு கூறினார்.
திரைப்படங்களில், வன்முறை பாராட்டப்படுவதையும் இளம் மனங்களில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்ற 'தீய நடத்தை' மற்றும் ஆபாசம் பயன்படுத்தப்படுவதையும் அவர் நிராகரித்தார். மக்களின் மனங்களில் குறிப்பாக இளைஞர்களின் மனங்களில் ஆக்கபூர்வமான உணர்வை சினிமா ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். தேசத்தின் நலன்களை மனதில் கொண்டு, திரைப்படத்தைத் தயாரிக்குமாறு திரைப்படத் தயாரிப்பாளர்களையும் அவர் அறிவுறுத்தினார்.
இந்தித் திரைப்பட உலகின் மிகச் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளரான ராஜ்கபூரின் குறிப்பிடத்தக்க நினைவுகளை வெளிக்கொண்டு வந்துள்ள திரு ராகுல் ராவைல், அவருடன் இணைந்து நூலை எழுதியுள்ள திருமதி ப்ரானிக்கா சர்மா ஆகியோரை வெங்கய்யா நாயுடு பாராட்டினார். தொலைநோக்குப் பார்வை கொண்ட மேதை என்றும் பன்முகத் திறன் கொண்ட நடிகர் என்றும் ராஜ்கபூரைப் புகழ்ந்துரைத்த வெங்கய்யா நாயுடு, இந்தியத் திரைப்படத் தொழில்துறைக்கு அவரின் பங்களிப்பு அளவிட முடியாதது என்றார். ராஜ்கபூரின் பெரும்பாலான திரைப்படங்கள் வாழ்க்கைப் பாடத்தின் முக்கிய விஷயங்களைக் கொண்டிருந்தன. மிகவும் நுட்பமாகவும், தனித்துவத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அந்த சகாப்தத்தின் சினிமாவை நான் உண்மையிலேயே தவறவிட்டுவிட்டேன் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu