சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி-மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்
சிறார்களிடையே கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு ஊக்கம் தரும் வகையில், 5 வயது முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு அவசர காலத்தில் பயன்படுத்த 2 தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
6-12 வயது வரையிலான சிறார்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசியையும், 5-12 வயது வரையிலான சிறார்களுக்கு பயாலஜிகல்-இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் தடுப்பூசியையும் அவசர காலத்தில் நிபந்தனைகளுக்கு உள்பட்டு பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) நிபுணா் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
தற்சமயம், மத்திய அரசின் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 15-18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியும், 12-15 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு பயாலஜிகல்-இ நிறுவனத்தின் தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கோவேக்ஸின் தடுப்பூசியை சிறார்களுக்குப் பயன்படுத்துவது தொடா்பாக நடத்தப்பட்ட பரிசோதனைகளை ஆய்வு செய்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, கோவேக்ஸின் தடுப்பூசியை 2-18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு பயன்படுத்த கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பரிந்துரை செய்தது. இருப்பினும், 12-18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மட்டுமே அந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த டிஜிசிஐ ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை 5-12 வயதுக்கு உள்பட்டவா்களுக்குப் பயன்படுத்த டிசிஜிஐயின் மருத்துவ நிபுணா் குழு கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பரிந்துரை செய்தது. 12-15 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு அந்தத் தடுப்பூசி தற்போது பயன்பாட்டில் உள்ளது.தற்சமயம், ஃபைசா் நிறுவனத்தின் தடுப்பூசியும் 12 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.சைடஸ் நிறுவனத்தின் சைகோவ்-டி தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டவா்களுக்குப் பயன்படுத்த டிசிஜிஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால், அந்தத் தடுப்பூசி இன்னும் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சோ்க்கப்படவில்லை.
கொரோனா நிலவரம் குறித்து பல்வேறு மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி புதன்கிழமை (ஏப். 27) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்
அப்போது நாட்டின் கொரோனா சூழல் குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் எடுத்துரைப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா நிலவரம் தொடா்பாக மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி புதன்கிழமை பகல் 12 மணியளவில் கலந்துரையாடுகிறார்' என்றனா்.
ஏற்கெனவே தொடா்ச்சியாக பண்டிகைகள் வருவதை முன்னிட்டு, கரோனா அச்சுறுத்தலை எதிர் கொள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் உள்ளிட்ட கொரோனா நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமா் மோடி தனது 'மனதின் குரல்' (மான் கி பாத்) உரையில் தெரிவித்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu