கிலோ ரூ. 27.50-க்கு 'பாரத்' கோதுமை மாவு: மத்திய அரசு துவக்கம்

கிலோ ரூ. 27.50-க்கு பாரத் கோதுமை மாவு: மத்திய அரசு துவக்கம்
X

பாரத் கோதுமை மாவு விற்பனை துவக்கி வைக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை சீராக உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள கடமைப் பாதையில் 'பாரத்' பிராண்டின் கீழ் கோதுமை மாவு (ஆட்டா) விற்பனை செய்வதற்கான 100 நடமாடும் வேன் வாகனங்களைப் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதில் ஆட்டா ஒரு கிலோவுக்கு ரூ. 27.50-க்கு மிகாமல் சில்லறை விலையில் கிடைக்கும். சாதாரண நுகர்வோரின் நலனுக்காக மத்திய அரசு எடுத்துள்ள தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். 'பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையைத் தொடங்குவது சந்தையில் மலிவு விலையில் விநியோகத்தை அதிகரிக்கும். மேலும் இந்த முக்கியமான உணவுப் பொருளின் விலை குறைய உதவும்.

'பாரத்' அட்டா இன்று முதல் கேந்திரிய பந்தர், நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப் ஆகியவற்றின் அனைத்து கடைகள் மற்றும் நடமாடும் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். அத்துடன் பிற கூட்டுறவு, சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் இதன் விற்பனை விரிவுபடுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு பியூஷ் கோயல், மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளது என்றார். தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசு கேந்திரிய பந்தர், நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப் மூலம் ஒரு கிலோ பாரத் பருப்பை ரூ. 60 க்கு வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த முயற்சிகள் அனைத்தும் விவசாயிகளுக்கு பெரும் பயனளித்துள்ளன என்றும் அவர் கூறினார். விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து, அதன் பின்னர், நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, நுகர்வோருக்கும் விவசாயிகளுக்கும் உதவ வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளார் என்று பியூஷ் கோயல் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!