மூத்தக் குடிமக்களுக்கான மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகள்

மூத்தக் குடிமக்களுக்கான மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகள்
X
மூத்தக் குடிமக்களுக்கான மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகள் குறித்து மக்களவையில் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மூத்தக் குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், நலிவடைந்த மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு போன்ற அடிப்படை வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மூத்த குடிமக்கள் இல்லங்களை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் செயலாக்க முகமைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ராஷ்ட்ரீய வயோஸ்ரீ திட்டத்தின் மூலம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அல்லது மாத வருமானம் ரூ.15,000/- உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் மற்றும் வயது முதிர்வு தொடர்பான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கு முகாம் முறையில் உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் முழு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 60 முதல் 79 வயது வரை உள்ள முதியோருக்கு மாதந்தோறும் ரூ.200 வீதம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி 80 வயதை அடையும் போது ஓய்வூதியம் ரூ.500/- ஆக உயர்த்தப்படுகிறது.

தற்சமயம், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், தேசிய சமூக உதவித் திட்டத்தின் (என்.எஸ்.ஏ.பி) ஒரு பகுதியாக இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு மாதத்திற்கு ரூ.50/- முதல் ரூ.3,000/- வரை டாப்-அப் தொகையை சேர்க்கின்றன. தற்சமயம், நாட்டில் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2.21 கோடியாகும், மேலும் இத்திட்டம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஏறத்தாழ 100% செறிவூட்டலை எட்டியுள்ளது. என்.எஸ்.ஏ.பி ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் மாநில / யூனியன் பிரதேச வரம்பை விட அதிகமான தகுதியான பயனாளிகள் இருந்தால் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்கள் சொந்த ஆதாரங்களிலிருந்து ஓய்வூதியத்தை வழங்கலாம்.

இந்தியாவின் 18 மாநிலங்களில் உள்ள 19 மருத்துவக் கல்லூரிகளில் அமைந்துள்ள பிராந்திய முதியோர் மையங்கள் மற்றும் எய்ம்ஸில் உள்ள இரண்டு தேசிய முதியோர் மையங்கள் மூலம் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. புதுதில்லி, அன்சாரி நகர், சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் நடத்தப்படும் மூத்த குடிமக்கள் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகள் குறித்த ஆராய்ச்சியும் இதில் அடங்கும். 10 கோடி ஏழை மற்றும் பாதிக்கப்படும் குடும்பங்களை (தோராயமாக 50 கோடி பயனாளிகள்) உள்ளடக்கிய ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் கே.எம்.பிரதிமா பவுமிக் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business