ஜல்லிக்கட்டை பார்க்க உச்சநீதிமன்ற நீதிபதிகளை அழைக்க மாட்டீர்களா?: நீதிபதிகள்

ஜல்லிக்கட்டை பார்க்க உச்சநீதிமன்ற நீதிபதிகளை அழைக்க மாட்டீர்களா?: நீதிபதிகள்
X
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் போட்டி நடைபெறும் இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற விசாரணையின் போது ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது எந்த விதிமீறலும் நடைபெறுவதாக தெரியவில்லை என்றும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விதிகளை அமல்படுத்த வேண்டும் என்பதே முக்கியமே தவிர, ஜல்லிக்கட்டு நடைமுறையை மாற்ற வேண்டும் என்பது அல்ல என்று நீதிபதிகள் கூறினார்கள்.

அதற்கு பீட்டா அமைப்பு சார்பில் வாதாடிய வக்கீல், "ஏற்கனவே நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் ஒரு பழக்கத்தை காட்டுமிராண்டித்தனம் என அறிவித்துவிட்டதால், அதனை மீண்டும் இந்த நீதிமன்றம் மாற்றி அமைக்கக் கூடாது" என்று வாதிட்டார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விதிமுறைகள் குறித்தும், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது எப்படி என்ற விவரங்கள் குறித்தும் தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக "ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் 15 மீட்டர் தூரம் மட்டுமே ஓட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. காளைகள் எப்படி 15 மீட்டர் தூரம் மட்டும் ஓட முடியும்? வீரர்கள் அனைவரும் காளையை தொட அனுமதி உள்ளதா? ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற 15 சதுர மீட்டர் இடம் போதுமானதாக இருக்குமா? காளைகள் வெளியேற ஒதுக்கப்பட்ட 100 மீட்டர் தூரத்தில் காளைகள் எப்படி வெளியேறுகின்றன? 90 சதுர மீட்டர் குறுகிய இடத்தில் காளைகளை ஓட விடாமல் வீரர்கள் தடுக்கிறார்களா? காளைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடம், சென்று சேருடமிடம் தவிர ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா?" என பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டியின்போது தகுதியுடைய ஒரு வீரர் மட்டுமே ஒரு நேரத்தில் காளையை தொட முடியும் எனவும், இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியின் பங்கேற்கும் வீரர்கள் அவரவரின் இடங்களில் தான் நிற்க வேண்டும் என்றும் காளைகள் வெளியேறும் பாதையை அடைக்க அனுமதி இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும் தேவைப்பட்டால் நீதிபதிகளின் கேள்விகள் தொடர்பாக விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும், தமிழக அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரிஷிகேஷ் ராய், ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு இந்த உச்சநீதிமன்றம அரசியல் சாசன அமர்வு நீதிபதிகளை அழைக்க மாட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு, 'நீதிபதிகளை அழைப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி' என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!