மகளிர் சக்தியின் கொண்டாட்டத்தைக் குறிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி

மகளிர் சக்தியின் கொண்டாட்டத்தைக் குறிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி
X

பிரதமர் நரேந்திர மோடி.

இடைக்கால பட்ஜெட் ஆகியவை மகளிர் சக்தியின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரை நினைவுகூர்ந்து, முதல் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துரைத்தார். "மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது நம் நாட்டிற்கான ஒரு முக்கிய தருணம்" என்று கூறினார்.

ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழா பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மகளிர் சக்தியின் வலிமை, வீரம், உறுதிப்பாடு ஆகியவற்றை நாடு ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டினார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் உரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால பட்ஜெட் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இது மகளிருக்கு அதிகாரமளித்தலின் கொண்டாட்டம் என்று விவரித்தார்.

கடந்த பத்தாண்டுகளை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் பங்களிப்பையும் அங்கீகரித்தார். எனினும், ஜனநாயக அம்சங்களிலிருந்து விலகி, குழப்பம், இடையூறுகளில் ஈடுபடுபவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "ஜனநாயகத்தில் விமர்சனமும் எதிர்ப்பும் அவசியம். ஆனால் ஆக்கபூர்வமான கருத்துகளால் அவையை வளப்படுத்தியவர்கள்தான் பெரிய அளவிலான நினைவில் கொள்ளப்படுகிறார்கள்" என்று பிரதமர் கூறினார். “இடையூறு ஏற்படுத்தியவர்களை யாரும் நினைவில் கொள்வதில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளின் நிகழ்வு பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்தும் விவரித்தார். "இங்கு பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் வரலாற்றின் ஏடுகளில் எதிரொலிக்கும்" என்று அவர் கூறினார். "ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், சீர்குலைக்கும் நடத்தை தெளிவின்மைக்குள் ஆழ்த்திவிடும்" என்று கூறி, உறுப்பினர்கள் முறையாக செயல்படுமாறு அழைப்பு விடுத்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நேர்மறையான முத்திரையைப் பதிக்க இந்த வாய்ப்பை மதிப்புமிக்க அனைத்து உறுப்பினர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு மோடி கேட்டுக் கொண்டார். நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், "நம்மால் இயன்றதை சிறப்பாக செயல்படுத்தவும், நமது சிந்தனைகளால் அவையை வளப்படுத்தவும், நாட்டை உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் எடுத்துச்செல்லவும் பாடுபடுவோம்" என்று கூறினார்.

எதிர்வரும் பட்ஜெட்டைப் பொறுத்தவரை, "வழக்கமாக, தேர்தல் நேரம் நெருங்கும்போது, முழு பட்ஜெட் சமர்ப்பிக்கப்படாது. நாங்களும் அதே பாரம்பரியத்தைப் பின்பற்றி, புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர் முழு பட்ஜெட்டை உங்கள் முன் சமர்ப்பிப்போம்” என்று கூறினார். இந்த முறை, நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சில வழிகாட்டும் அம்சங்களுடன் நாளை தனது பட்ஜெட்டை நம் அனைவரது முன்னிலையில் தாக்கல் செய்ய உள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

"மக்களின் ஆசீர்வாதத்தால் உந்தப்பட்டு, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விரிவான வளர்ச்சிக்கான இந்தியாவின் பயணம் தொடரும்" என்று பிரதம மோடி தனது உரையை நிறைவு செய்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை:

நாடாளுமன்ற புதியக் கட்டிடத்தின் முதலாவது அமர்வின் முடிவில், மிக முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக - மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜனவரி 26 அன்று, 'கடைமைப் பாதையில்' நடைபெற்ற அணிவகுப்பில் பெண்களின் துணிச்சல், வலிமை மற்றும் மனஉறுதியைக் காணமுடிந்தது. இன்று, பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் வழிகாட்டுதல்கள், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட் போன்றவை பெண்களின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. பெண்களின் வலிமையை வெளிப்படுத்தும் அம்சமாக இத்தகைய நிகழ்வுகள் அமைந்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களுக்கே உரித்தான வகையில், பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனினும், அவை நடவடிக்கைளில் இடையூறு ஏற்படுத்துவதையும், ஜனநாயக மாண்புகளைக் குறைத்து மதிப்பிடுவதையும் குறிப்பாக சில உறுப்பினர்கள் தங்களது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதி அமர்வில், கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்து, அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மக்களிடம் கேட்கும் போது, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களின் பெயர்கள் அவர்களது நினைவில் இருக்காது. எதிர்க்கட்சிகளின் தீவிரமான விமர்சனங்கள் தொடர்ந்து இருந்தபோதிலும், கணிசமான எண்ணிக்கையிலான மக்களவையில் ஆக்கபூர்வமாக செயல்பட்டவர்களை நினைவில் கொள்வார்கள்.

இனி வரும் காலங்களில் மக்களவையில் நடைபெறும் விவாதங்களை கவனிக்கும் போது, உறுப்பினர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் வரலாற்றில் இடம்பெறும். எனவே, அவையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தகுந்த பதிலளிக்கும் விதமாக மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, உறுப்பினர்கள் அவையில் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். உறுப்பினர்களின் கண்ணியமான செயல்பாடுகள், நாட்டின் ஜனநாயக மாண்புகள் மற்றும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள கணிசமான மக்களால் பாராட்டப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதற்கு நேர்மாறாக, எதிர்மறையான எண்ணங்கள், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள், சுயநலமுடையவர்கள், மக்களால் அரிதாகவே நினைவுகூரப்படுகின்றனர். இருப்பினும், நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், மதிப்பு வாய்ந்த சிந்தைகளை அவைக்கு வழங்குவதன் மூலம், நாட்டிற்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மரபு இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த மரபிற்கு உட்பட்டு புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த நேரத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய இடைக்கால பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.

நாடு தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் சென்று வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்டும் என்றும், வளர்ச்சியை உள்ளடக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றும் நான் நம்புகிறேன். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பயணம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் ஆசியுடன் இந்த செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இத்தகையை நம்பிக்கையுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் இன்றைய உரை 140 கோடி இந்தியர்களின் கூட்டு வலிமையை எடுத்துக்காட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், "நமது தேசம் அடைந்த தொடர்ச்சியான சாதனைகளில், 140 கோடி இந்தியர்களின் கூட்டு வலிமையை எடுத்துக்காட்டிய குடியரசுத்தலைவரின் விரிவான மற்றும் உள்ளார்ந்த உரையுடன் பட்ஜெட் அமர்வு தொடங்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவை மேலும் மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையை இந்த உரை எடுத்துரைத்துள்ளது”. என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story