திருப்பதி ஏழுமலையான் கோயிவிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய பிரம்மோற்சவம்
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் வழக்கமாக நடத்தி வருகிறது. நவராத்திரி நடைபெறும் சமயங்களில் இந்த பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, திருவோண நட்சத்திர தினத்தன்று நிறைவுபெறும்.
ஏழுமலையான் திருமலையில் அடி வைத்த நாளில், அவர் பிரம்ம தேவனை அழைத்து உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என்று உத்திரவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.
அதை மகிழ்வுடன் ஏற்று, பிரம்ம தேவர் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று நிறைவுபெறும் விதம், 9 நாள்கள் உற்சவத்தை நடத்தினார். பிரம்மன் நடத்திய உற்சவம் என்பதால், இது பிரம்மோற்சவம் என்று வழங்கப்பட்டு வருகிறது. பிரம்மோற்சவ நாள்களில் காலை 9 மணிமுதல் 11 மணி வரையிலும், இரவு 8 மணிமுதல் 10 மணிவரையிலும் வாகன சேவைகள் நடைபெறவுள்ளன.
வாகன சேவையின் போது அன்னமாச்சார்யா திட்டத்தின் சார்பில் கலைஞர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செப்டம்பர் 18 முதல் 26 வரையிலும், அக்டோபர் 15 முதல் 23 வரையிலும் அஷ்டதளபாத பத்மராதனம், திருப்பாவாடை, கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை, சஹஸ்ரதீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ நாட்களில் சேவா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் நியமிக்கப்பட்ட வாகன சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அக்டோபர் 14-ம் தேதி அங்குரார்ப்பணம் நடக்க உள்ளதால் அன்றும் சஹஸ்ரதீப அலங்கார சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வருடாந்திர பிரம்மோற்சவத்தில் முக்கியமாக செப்டம்பர் 18-ம் தேதி கொடியேற்றம், 22-ம் தேதி கருட சேவை, 23-ம் தேதி தங்கத்தேர், 25-ம் தேதி திருத்தேர், 26-ம் தேதி தீர்த்தவாரி, கொடியிறக்கம் ஆகியவை நடைபெறவுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu