விவசாயிகள் போராட்டம் முடிவிற்கு வராததால் பஞ்சாபில் பாஜக தனித்து போட்டி
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தளம் கூட்டணி வைக்க முன்வராததால், பாஜக தனியாக களம் காண்கிறது.
கடந்த 2019ம் ஆண்டைப் போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தை பொறுத்த அளவில், 13 லோக்சபா தொகுதிகளுக்கும் 7ம் கட்டமாக ஜூன் 1ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே, தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. இந்நிலையில், பஞ்சாபில் பாஜகவுடன் கூட்டணிக்கு எந்த கட்சியும் வராததால், அக்கட்சி தனியாக போட்டியிடுகிறது
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைத்திருந்தது. இதற்கு பிரதி பலனாக மத்திய இணையமைச்சர் பதவியை இக்கட்சியை சேர்ந்த 'ஹர்சிம்ரத் கவுர் பாதலுக்கு' பாஜக கொடுத்திருந்தது. ஆனால், கடந்த 2020ல் வெடித்த விவசாயிகள் போராட்டத்தால், 'பாதல்' தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் அகாலி தளத்திற்கும், பாஜகவுக்கும் இடையே இருந்த உறவு முறிந்தது. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க பாஜக ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இப்போது வரை விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருவதால் இந்த கூட்டணி முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. எனவே பாஜக பஞ்சாபில் தனித்து போட்டியிடுகிறது. இதனை பாஜக மாநில தலைவர் சுனில் ஜாகர் உறுதி செய்திருக்கிறார்.
தனித்து போட்டியிடுவது என்கிற முடிவு பஞ்சாப் மக்கள் மற்றும் பாஜக தொண்டர்களின் கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 2020ல் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்தல், லக்கிம்பூர் கெரி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாலும், போராட்டத்தில் சில விவசாயிகள் உயிரிழந்ததாலும் ஒட்டுமொத்த பஞ்சாப் மாநிலமே கொதிப்பில் இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu