நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகளை தடுக்க மக்களவையில் மசோதா அறிமுகம்

நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகளை தடுக்க மக்களவையில் மசோதா அறிமுகம்
X

பைல் படம்

நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகளை தடுக்க மக்களவையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) நடத்தப்படும் ஆட்சேர்ப்புத் தேர்வுகள், நீட், ஜேஇஇ, கியூஇடி போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளைத் தடுக்க "பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) மசோதா, 2024"-ஐ மத்திய அரசு இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியது.

இந்த மசோதாவை மத்தியப் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.

"நியாயமற்ற வழிமுறைகளைத் தடுக்கும் மசோதா, 2024" யூபிஎஸ்சி, எஸ்எஸ்இ, ரயில்வே, வங்கித்துறை போன்ற ஆட்சேர்ப்புத் தேர்வுகள் மற்றும் தேசியத் தேர்வு முகமையால் கணினி அடிப்படையில் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும்.

மோசடியைத் தடுக்கக் குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும், மோசடி, திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, குறைந்தபட்சம் ரூ.1 கோடி அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வகைசெய்கிறது.

இந்த மசோதா பண ஆதாயங்களுக்காக நியாயமற்ற வழிகளில் ஈடுபடும் கும்பல்கள் மற்றும் நிறுவனங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இது தேர்வர்களை அதன் விதிகளிலிருந்து பாதுகாக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில், வினாத்தாள்களின் கசிவு, திட்டமிட்ட மோசடிகள் ஆகியவை காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்படைந்துள்ளதாகக் கூறி ஜிதேந்திர சிங், மசோதாவின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை விளக்கினார்.

"சமீப காலங்களில், சமூக விரோத, குற்றவியல் கூறுகளால் பின்பற்றப்பட்ட நியாயமற்ற நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளின் பாதகமான தாக்கம் காரணமாக பல மாநிலங்கள் தங்கள் பொதுத் தேர்வுகளின் முடிவுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது அல்லது அறிவிக்க முடியவில்லை. இந்த நியாயமற்ற நடைமுறைகள் தடுக்கப்படாதது, இந்த நாட்டின் லட்சக்கணக்கான ஆர்வமுள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் தொடர்ந்து ஆபத்தில் ஆழ்த்தும். பல சந்தர்ப்பங்களில், மோசடிக்குழுக்கள் மற்றும் மாஃபியா கும்பல்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ஆள்மாறாட்ட முறைகளைப் பயன்படுத்துவதுடன், வினாத்தாள் கசிவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த மசோதா முதன்மையாக இதுபோன்ற தீய சக்திகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இத்தகைய குற்றம் இழைப்பவர்களை தண்டிக்க தேசிய அளவில் குறிப்பிட்ட கணிசமான சட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் கூறினார்.

"எனவே, இந்த பாதிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் தேர்வு அமைப்புகளுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள கூறுகள் அடையாளம் காணப்பட்டு ஒரு விரிவான மத்திய சட்டத்தின் மூலம் திறம்பட கையாளப்படுவது அவசியம் ஆகிறது. இந்தத் தேர்வுகளில் கலந்து கொள்ளும் உண்மையான மற்றும் நேர்மையான இளைஞர்களின் வாழ்க்கையுடனும், நம்பிக்கையுடனும் இதுபோன்ற கிரிமினல் சக்திகள் விளையாடுவதைத் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது"என்று அவர் கூறினார்.

பொதுத் தேர்வு முறைகளில் அதிக வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையைக் கொண்டுவருவதும், இளைஞர்களின் நேர்மையான மற்றும் உண்மையான முயற்சிகளுக்கு நியாயமான வெகுமதி அளிக்கப்படும் என்றும், அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் உறுதியளிப்பதே இதன் நோக்கம் என்று ஜிதேந்திர சிங் கூறினார்.

"இந்த மசோதா பல்வேறு நியாயமற்ற வழிகளில் ஈடுபடும் நபர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் அல்லது நிறுவனங்களை திறம்பட மற்றும் சட்டபூர்வமாக தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த மசோதா, தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களைத் தண்டனை விதிகளிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் அவர்கள் தேர்வு நடத்தும் அதிகாரியின் தற்போதுள்ள நியாயமற்ற வழிமுறைகள் கொள்கையின் விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பல தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுவதையும், பொதுத் தேர்வுகளை நடத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வுகளுக்கான உயர்மட்ட தேசிய தொழில்நுட்பக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் விரிவான மின்னணு கண்காணிப்பை உறுதி செய்தல், அத்தகைய தேர்வுகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய இரண்டிற்கும் தேசிய தரம் மற்றும் சேவை நிலைகளை உருவாக்குதல் ஆகியவை இதன் கீழ் வரும்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து