பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேர் சரண்
பில்கிஸ் பானு
பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் மாநிலம் பஞ்சமஹாலில் உள்ள கோத்ரா சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சரணடைந்தனா்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, 21 வயது கா்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். மேலும், அவரின் குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் கொலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோத்ரா வழக்கு தொடர்பாக குஜராத் அரசு அமைத்த சிறப்புக் குழுவின் பரிந்துரையின்படி நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகக் கூறி குஜராத் அரசாங்கம் அவர்களைக் கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
அவா்களின் தண்டனைக் குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், குற்றவாளிகள் 11 பேரையும் கடந்த 2022-ஆம் ஆண்டு குஜராத் அரசு சிறையிலிருந்து விடுவித்தது.
இதற்கு எதிராக பில்கிஸ் பானு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து அவா்கள் அனைவரும் 2 வாரங்களுக்குள் சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், அவா்கள் சிறைக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து ஞாயிற்றுக்கிழமைக்குள் சரணடையுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருவதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது. மேலும் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையைக் காப்பது மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் 2 வாரங்களில் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, குற்றவாளிகள் 11 பேரும் கோத்ரா சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சரணடைந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu