வெங்காய ஏற்றுமதி தடை தொடருமா?: அதிகாரிகள் தகவல்
கோப்புப்படம்
இந்தியாவில் கடந்த ஆண்டில் வெங்காயம் மீதான விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது. மொத்த விற்பனை விலையில் பெரிய வெங்காயம் கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கும், சில்லறை விற்பனை விலையில் கிலோ 80 ரூபாய் வரையிலும் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது.
எனவே, உள்நாட்டில் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. வெங்காய ஏற்றுமதி மீதான தடை கடந்த டிசம்பர் 8ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், நடப்பு ஆண்டின் மார்ச் 31ம் தேதி வரை தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், நடப்பு ராபி பருவத்தில் வெங்காயத்தின் விளைச்சல் 2 கோடியே 27 லட்சம் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மத்திய அரசு வேளாண் முன் கணிப்பில் கிடைத்த அளவை விட குறைவானதாகும். எனவே, வெங்காயம் மீதான விலை உயரும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலர் ரோகித்குமார் சிங் கூறும்போது, "நாட்டின் மிகப் பெரிய வெங்காய சந்தையான லாசல்கோனில் ஒரு குவிண்டால் வெங்காயம் விலை கடந்த பிப்ரவரி 17ம் தேதி ஆயிரத்து 280 ரூபாயாக இருந்தது. இது பிப்ரவரி 19ம் தேதி 42 சத வீதம் விலை உயர்ந்து ஆயிரத்து 800 ரூபாயானது. காரணம், வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை அரசு நீக்கியுள்ளதாக வெளியான தகவல்கள்தான்.
உண்மையில் வெங்காயம் ஏற்றுமதி மீதான மத்திய அரசின்தடை இன்னமும் அமலில் உள்ளது. நாட்டில் வெங்காயம் மீதான விலை சீராகும் வரை ஏற்றுமதி மீதான தடை தொடரும்'' என்றார்.
இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் நுகர்வோர் நலத்துறையின் உயர் அதிகாரிகள் சிலர் கூறும்போது, "வெங்காயம் ராபி சீசனில் விளைச்சல் குறையும் என்று தெரியவந்துள்ளது. விளைச்சல் குறைந்தால் விலை உயரும். இது தேர்தல் நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு கருதுகிறது. வெங்காயம் ஏற்றுமதி மீதான தடை மார்ச் 31ம் தேதி வரை தொடரும்
என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட் டுள்ளது. ஆனால், உண்மையில் இந்தத் தடையானது, விலை நிலவரம் சீராகும்வரை தொடரும் என்று கருதுகிறோம்” என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu