போஸ்ட் ஆபீஸ்களில் ஆன்லைன் சேவைகள் : மத்திய அரசு அசத்தல்
அஞ்சலகங்கள் தோறும், 'பொது சேவை மையம்' துவக்குவதற்கு, அஞ்சல் துறை முடிவு செய்து உள்ளது. 'பொது சேவை மையத்தில்' பாஸ்போர்ட், ரயில்வே பயணியர் டிக்கெட், மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் காப்பீடு கார்டு உள்ளிட்ட பல வித சேவைகள் பெற விண்ணப்பிக்கலாம். இப்படி தனியார் பொது சேவை மையங்களை போன்று மக்களுக்கு சேவையாற்ற அஞ்சல் துறை முடிவு செய்து உள்ளது. தலைமை தபால் நிலையங்கள் மற்றும் ஒரு சில துணை அஞ்சலகங்களில், 2020 - -21ம் நிதி ஆண்டு ஆதார் சேவை மையங்களை துவக்கியது.
புதிய ஆதார் அட்டை எடுப்பது, பெயர்கள் மற்றும் பிறந்த தேதியுடன் கூடிய ஆதார் அட்டை வழங்குவது உள்ளிட்ட சேவை வாயிலாக இதுவரை 201,000 நபர்கள் பயனடைந்துள்ளனர். அஞ்சல் துறையில், ஏற்கனவே ஆதார் சேவை மையங்கள் செயல்படுவதை போல கூடுதலாக, பொது சேவை மையங்கள் துவக்கப்பட உள்ளன.
இதை விரிவுபடுத்தும் நோக்கத்திற்கு, அஞ்சலகங்கள் தோறும் 'பொது சேவை மையம்' துவக்கி பல விதமான சேவைகளை செய்ய உள்ளது. இதில், மத்திய அரசின் பல வித திட்டங்களுக்கு 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். அஞ்சல் பொது சேவை மையத்தில் பாஸ்போர்ட், பான்கார்டு, ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்தல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு காப்பீடு அட்டை பெறுதல் உள்ளிட்ட சேவைகள் பெறலாம். இனி, பொது மக்கள், தனியார் சேவை மையங்களை தேடி அலைய வேண்டிய நிலை இருக்காது என, அஞ்சலக துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu