ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல்: உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல்: உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை
X

மத்திய அமைச்சர் அமித்ஷா.

ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி உள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், அமர்நாத் யாத்திரை முடிந்த பின்னர் தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்கியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் விசாரணை நடத்தப்பட்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜம்மு காஷ்மீரில் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. யூனியன் பிரதேசமாக இருக்கும் ஜம்மு காஷ்மீரை முடிந்தவரை விரைவாக மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்தனர். எனவே இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டு முழு மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்திருந்தது

இந்நிலையில்தான் அமர்நாத் யாத்திரை முடிந்த பின்னர் ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றிரவு உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தலைமையில் ஜம்மு காஷ்மீரின் பாஜக எம்பிக்கள் மற்றும் கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது. இந்த கூட்டத்தில் வரும் 19ம் தேதியுடன் அமர்நாத் யாத்திரை முடிவடைகிறது. அதன் பின்னர் தேர்தல் நடத்தப்படும் என்றும், எனவே அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கட்சியின் எம்.பி.க்கள் ஜிதேந்திர சிங் மற்றும் ஜுகல் கிஷோர் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டம் சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்றிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் முழுமையாக குறைந்துவிட்டது என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்ற ஜூன் 9ம் தேதியன்று, ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் 9 பேர் வரை உயிரிழந்தனர். இதற்கடுத்து ஜூன் 11,12ம் தேதியும் காஷ்மீரில் தொடர் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளன.

இப்படியான அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவது என்பது மத்திய அரசுக்கு சவாலானதாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் கோர்ட்டு உத்தரவுப்படி ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்தி முடிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது. இதன் காரணமாகவே அமித்ஷா தலைமையில் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!