சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2023: ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், ம.பி.யில் இன்று வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை - மாதிரி படம்
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது . அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமான முன்னோட்டமாகும். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்த நிலையில், சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நான்கு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக சட்டசபை தேர்தல் திருவிழா களை கட்டியிருந்தது.
இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதாவும், காங்கிரசும் நேரடியாக மோதின . தெலுங்கானாவில் இந்த 2 தேசிய கட்சிகளுடன் பாரதிய ராஷ்டிர சமிதியும் சேர்ந்ததால் மும்முனை போட்டி நிலவியது. மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணியும், சோரம் மக்களின் இயக்கமும் நேரடியாக மோதிக்கொள்ள, காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளும் சேர்ந்து களத்தை வலுப்படுத்தின.
இந்த மாநிலங்களில் கடந்த மாதம் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், மிசோரமை தவிர மீதமுள்ள 4 மாநிலங்களில் பதிவான வாக்குகளும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.
மத்திய பிரதேசம்
பா.ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 17-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மாநிலத்தில் 252 பெண்கள் உள்பட 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அங்கு தபால் வாக்குகளையும் சேர்த்து 77.82 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் 52 மாவட்டங்களின் தலைநகரங்களில் இன்று எண்ணப்படுகின்றன.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என மாநில தேர்தல் அதிகாரி அனுபம் ராஜன் தெரிவித்தார்.
ராஜஸ்தான்
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு கடந்த 25-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் 74.62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மாநிலத்தில் கடந்த சில தேர்தல்களாகவே ஒவ்வொரு 5 ஆண்டும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன.
தற்போது அங்கே காங்கிரஸ் ஆண்டுவரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகள் தங்களது ஆட்சி என பா.ஜனதாவினர் நம்புகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் அவர்களுக்கு ஆதரவாகவே உள்ளன.
சத்தீஸ்கர்
காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் கடந்த மாதம் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 76.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
முதலமைச்சர் பூபேஷ் பாகேல், துணை முதல்-மந்திரி சிங் தியோ, முன்னாள் முதல்-மந்திரி ராமன் சிங் உள்பட ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1,181 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியவரும். அங்கு தேர்தலுக்கு பின்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் காங்கிரசே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் என தெரிய வந்திருக்கிறது.
தெலுங்கானா
பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆளும் தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அங்கு பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவியது.
இதில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அவரது மகன் கே.டி.ராமாராவ், காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜனதா எம்.பி.க்கள் பண்டி சஞ்சய் குமார், அரவிந்த் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். மாநில தேர்தலில் 71.34 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
தெலுங்கானா பிரிவினைக்கு முக்கிய பங்காற்றிய சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி, மாநிலத்தில் கடந்த 2 முறையாக தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. அங்கு ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் அந்த கட்சி உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன.
மிசோரம்
இந்த 4 மாநிலங்களுடன் தேர்தல் நடந்த மிசோரமில் இன்று நடைபெற இருந்த வாக்கு எண்ணிக்கை நாளைக்கு (திங்கட்கிழமை) மாற்றி வைக்கப்பட்டு இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் மிசோரமில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தேர்தல் கமிஷன் இந்த முடிவை எடுத்து இருக்கிறது.
ஆட்சியை பிடிப்பது யார்...?
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பலுக்குள் தெரிந்து விடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu