சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இனி ரயில்வே வேலை கிடைக்காது

ரயில்வே வேலையில் சேர விரும்புவோர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், ரயில்வே வேலையை பெறுவதற்கு நிரந்தர தடையை சந்திக்க நேரிடும் என ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே வேலையில் சேர விரும்புபவர்கள், ரயில்வே பாதைகளில் போராட்டம் நடத்துவது, ரயில்களை மறிப்பது, ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது கவனத்துக்கு வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தவறான நடவடிக்கைகள், ஒழுங்கீனமானவை என்பதால், இவர்கள் ரயில்வே / அரசு வேலைகளுக்கு பொருத்தமற்றவர்கள் என அந்த அறிக்கை கூறுகிறது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் வீடியோக்கள், சிறப்பு ஏஜன்சிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் விண்ணப்பதாரர்கள், காவல்துறை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் மற்றும் ரயில்வே வேலை பெறுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவர்.
ஆட்கள் தேர்வை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த ரயில்வே தேர்வு வாரியம் உறுதிபூண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வேலை விரும்பும் விண்ணப்பதாரர்கள், தவறாக வழிநடத்தப்படக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu