ஹெலிகாப்டர் விபத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ மேஜர் உயிரிழந்த சோகம்

ஹெலிகாப்டர் விபத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ மேஜர் உயிரிழந்த சோகம்
X

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த்.

அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் உயிரிழந்தார்.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் மண்டாலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான CHEETHA ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் அவருடன் சென்ற மற்றொரு வீரரும் உயிரிழந்தனர். அஸ்ஸாமில் உள்ள விமானப்படை பயிற்சி முகாமில் இருந்து ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்ட போது மேஜர் ஜெயந்த் மற்றும் கமாண்டர் ரெட்டி ஆகியோர் இந்த விபத்தில் பலியானது பின்னர் தெரிய வந்தது.


உயிரிழந்த மேஜர் ஜெயந்த் என்பவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ஆவார். ஜெயமங்கலம் ஊராட்சி வஉசி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் பிள்ளை மற்றும் மல்லிகா தம்பதிகளின் மகனான மேஜர் ஜெயந்த்திற்கு 37 வயது ஆகிறது.செல்லா என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த ஜெயந்த்திற்கு இதுவரை குழந்தைகள் இல்லை.


பணிக்கு சென்ற இடத்தில் ஹெலிஹாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஜெயமங்கலம் கிராமத்திற்கு மட்டுமல்லாது தேனி மாவட்ட மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் உடல்களும் நேற்று டெல்லி விமானப்படை தலைமையகம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் வீரர் ரெட்டியின் உடல் டெல்லியில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது.

இதற்கிடையே, அருணாச்சலப் பிரதேச மாநிலம் மண்டலா அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த்தின் உடல் தேஜ்பூரில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு இன்று ஐஏஎஃப் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது.

தேஜ்பூரில் இருந்து விமானம் மூலம் மேஜர் ஜெயந்த்தின் உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து பெரியகுளம் அருகே உள்ள ஜெயந்த்தின் சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு கொண்டுவரப்படும் என்றும் பின்னர் அங்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags

Next Story
ai solutions for small business