ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட புராதன சிலைகள்
மத்திய இணை அமைச்சர் எல் முருகன், கலாச்சாரத்துறை இணை அமைச்சர்கள் மீனாட்சி லேகி, அர்ஜூன் ராம் மேஹ்வால் ஆகியோர் முன்னிலையில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு இந்தச் சிலைகளைப் பெற்றுக்கொண்டார்.
ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட 10 புராதன சிலைகளை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னிலையில், மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டு, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட 10 புராதன சிலைகளை, மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு விவகாரங்கள் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, புதுதில்லியில் நேற்று தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
மத்திய இணை அமைச்சர் எல் முருகன், கலாச்சாரத்துறை இணை அமைச்சர்கள் மீனாட்சி லேகி, அர்ஜூன் ராம் மேஹ்வால் ஆகியோர் முன்னிலையில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு இந்தச் சிலைகளைப் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கிஷண் ரெட்டி, "கடந்த 8 ஆண்டுகளில் நமது பழங்கால நாகரீகப் பெருமையை பேணிக்காக்கவும், நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தைப் பாதுகாத்து இந்திய அறிவாற்றல் மற்றும் மரபுகளை உலகெங்கும் பரவச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நமது பாரம்பரியத்தை பேணிக்காத்து, ஊக்குவித்து, புகழ் பரப்பும் முயற்சியாக நமது கடவுள் சிலைகளை தாயகத்திற்கு மீட்டு வந்துள்ளோம்" என்று தெரிவித்தார். மேலும், "உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் கொண்டுள்ள தனிப்பட்ட நட்புறவு மற்றும் உறவுகள் காரணமாக, நம்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளை அடையாளம் காணும் பணியை ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் விரைவாக மேற்கொண்டு, அவற்றை திருப்பி ஒப்படைக்கும் வரை, ஒத்துழைத்து வருவதாகவும், அமைச்சர் குறிப்பிட்டார்.
75-வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடி வரும் வேளையில், உள்நாட்டு கலாச்சாரம், மரபுகள் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் இந்தியா உலகில் முன்னணி நாடாகத் திகழ்கிறது என்றும் அவர் கூறினார்.
துவாரபாலகர், நடராஜர், கங்கலமூர்த்தி கடயம், நாடிகேஸ்வர கடயம், நான்கு கைகளைக் கொண்ட விஷ்ணு, ஸ்ரீதேவி, சிவன் பார்வதி சிலைகள், குழந்தைப் பருவ சம்பந்தர், நின்ற கோலத்தில் குழந்தை பருவ சம்பந்தர் ஆகிய சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu