எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்பில் நரேந்திர மோடி அரசு உறுதிப்பாடு -அமித் ஷா

எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்பில் நரேந்திர மோடி அரசு  உறுதிப்பாடு -அமித் ஷா
X

ராஜஸ்தானில் இன்று ஜெய்சால்மரில் எல்லைப் பாதுகாப்பு படையின் 57-வது நிறுவன தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

எல்லைகளைக் காத்து நிற்கும் படைகள் மீது பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் உணர்வுபூர்வமான நேசம் கொண்டுள்ளார் - அமித் ஷா

ராஜஸ்தானில் இன்று ஜெய்சால்மரில் எல்லைப் பாதுகாப்பு படையின் 57-வது நிறுவன தினத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

பணியின் போது உயிர்த்தியாகம் புரிந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு தீரச்செயலுக்கான காவல்துறை பதக்கங்கள், தற்போது பணியாற்றும் வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு குடியரசு தலைவரின் காவல் பதக்கங்களை மத்திய உள்துறை அமைச்சர் வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர், 1965-ல் எல்லை பாதுகாப்பு படை உருவாக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக மோடி அரசு எல்லை மாவட்டத்தில் நிறுவன தினத்தைக் கொண்டாட முடிவு செய்தது என்றும், இந்தப் பாரம்பரியம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். இந்த நிறுவன தினம், நாடு சுதந்திரமடைந்த 75-வது ஆண்டில் கொண்டாடப்படுகிறது என்று கூறிய அவர், 75-வது சுதந்திர ஆண்டை விடுதலையின் அமிர்தப் பெருவிழாவாக கொண்டாட பிரதமர் முடிவு செய்தார் என்றார். நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வரையிலான இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.

எல்லை பாதுகாப்பு படை, போலீஸ் படைகளைச் சேர்ந்த 35,000-க்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் உயிர்த்தியாகம் புரிந்துள்ளதை அமித் ஷா சுட்டிக்காட்டினார். எல்லை பாதுகாப்பு படையினர் நாட்டின் சிக்கலான எல்லைகளைப் பாதுகாத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தப்படை பெருமை மிக்க வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும், 1965 போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இந்தப் படை இப்போது உலகிலேயே மிகப் பெரிய எல்லைப் படையாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எல்லைகளைக் காத்து நிற்கும் படைகள் மீது பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் உணர்வுபூர்வமான நேசம் கொண்டுள்ளார். என்றும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், சிஏபிஎப் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விரிவான மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன என்றும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். நாடு முன்னேறி, வளர்ச்சிப்பாதையில் செல்ல, அமைதியும் பாதுகாப்பும் நிலவ வேண்டும் என்று கூறிய அவர், அத்தகைய பாதுகாப்பை நமது பாதுகாப்பு படைகள் வழங்கி வருவதாக கூறினார்.

50,000 வீரர்களைப் பணியர்த்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறிய அமித் ஷா, மேலும் கூடுதலாக பணியமர்த்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். எல்லை பாதுகாப்புக்காக சாலைகள் அமைக்க, 2008 முதல் 2014 வரை ரூ.23,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது என்றும், ஆனால், நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், 2014 முதல் 2020 வரை இது ரூ.44,600 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்பில் நரேந்திர மோடி அரசின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!