கணினி , விண்வெளி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள மேம்பட்ட தொழில்நுட்பம் அவசியம்: ராஜநாத் சிங்
புனேவில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனத்தின் 12-வது பட்டமளிப்பு விழாவில் இன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.
மேம்பட்ட தொழில்நுட்ப செயல்பாடுகளை விரைவுபடுத்தி, அதிகரித்து வரும் கணினி மற்றும் விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இந்தியாவை முழுவதும் தயார்படுத்தும் முயற்சியில் முன்னேறுமாறு ஆராய்ச்சி நிறுவனங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
புனேவில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனத்தின் 12-வது பட்டமளிப்பு விழாவில் இன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தற்போதைய உலகளாவிய சூழலில் நாடுகளிடையே தொடர்ந்து மாறிவரும் அரசியல் மற்றும் பொருளாதார சமன்பாடுகள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
நவீன ரக தொழில்நுட்பங்களுக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கும் இடையேயான ஆழமான தொடர்பை சுட்டிக்காட்டிய திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறைக்கு மட்டுமல்லாது, சாதாரண மக்களும் பயன்பெறும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் போன்ற அமைப்புகள் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை அடையும் அரசின் தொலைநோக்குப் பார்வையை விளக்கிய அமைச்சர், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு இது இன்றியமையாதது என்று குறிப்பிட்டார்.
பாதுகாப்பு உபகரணங்களின் இறக்குமதி மீதான சார்பு இந்தியாவின் கேந்திர சுயாட்சிக்கு தடையாக இருக்கும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தத் துறையில் தன்னிறைவை அடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு இது முக்கிய காரணம் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். நிகர இறக்குமதியாளர் என்ற நிலைக்கு மாறாக, நிகர ஏற்றுமதியாளராக மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் நமது பொருளாதாரம் வலுவடைவதுடன், வேலைவாய்ப்புகளும் பெருகும் என்றார் அவர். தன்னிறைவு அடையாமல் உலகளாவிய விஷயங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க இயலாது என்றும் அவர் விளக்கினார். புதிய கண்டுபிடிப்புகளுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதையும் திரு ராஜ்நாத் சிங் சுட்டிக் காட்டினார்.
நிறுவனத்தின் வேந்தர் என்ற முறையில், விழாவின்போது 283 மாணவர்களுக்கு அவர் பட்டங்களை வழங்கினார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டி.ஆர்.டி.ஓ வின் தலைவருமான டாக்டர் சமீர் வி. காமத், பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி, மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் சி.பி. ராமநாராயணன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu