ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் 82 சதவீதம் வாக்குப்பதிவு

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் 82 சதவீதம் வாக்குப்பதிவு

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி,   முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு.

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் 82 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.

இந்தியாவிலேயே அதிக வாக்கு சதவீதம் ஆந்திராவில் பதிவாகி உள்ளது. இந்தச் சாதனை ஆளும் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா? அல்லது நன்மை தருமா என்பது மிக முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற வருகின்றது. அதில் இதுவரை 4 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. அதாவது 21 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றுள்ளன.

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்காகத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. சுமார் 82 சதவீத வாக்குகள் பதிவாகி, அதன் வாக்காளர் எண்ணிக்கையால் கவனத்தை ஈர்க்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. அந்த மாநிலத்தில் அதிகபட்சமாக 81.86% வாக்குப்பதிவுகள் பதிவாகியிருக்கின்றன. இந்தளவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதால், அது யாருக்குச் சாதகமாக முடியும்? அல்லது யாருக்குப் பாதகமாக முடியும் என்ற கேள்வி இப்போது புதியதாக எழுந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு 79.77% தான் இருந்தது. ஆனால், இந்த 2024 தேர்தலில் கிட்டத்தட்ட 82% வாக்குப்பதிவானது நடைபெற்றுள்ளது. இதில் தபால் வாக்குகள் 1.2% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இரண்டரை சதவீதம் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.

அதாவது மாலை 6 மணிக்கு மேலாகக் கூட வாக்காளர்கள் 3 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போட்டுள்ளார்கள்.

குறிப்பிட்டுச் சொல்லப்போனால் ஓங்கோல் மக்களைவைத் தொகுதியில் மட்டும் 87.06% அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதைப்போலவே தசி சட்டப்பேரவை தொகுதியில் 90.91% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை நடந்துமுடிந்துள்ள மக்களவைத் தேர்தல்களில் அதிக அளவுக்கு வாக்கு சதவீதம் பதிவாகியுள்ள முதல் மாநிலமாக ஆந்திரா ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது. இந்தளவுக்கு வாக்கு சதவீதம் உயர்வதற்காகக் காரணம், மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் சேர்ந்து நடைபெற்றதுதான் என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் அன்று மாலை 6 மணிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படி டோக்கன் வழங்கப்பட்டவர்கள் மறுநாள் காலைவரை காத்திருந்து ஓட்டுப் போடும் அளவுக்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது.

இது குறித்து ஆந்திராவின் தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா, "பல சாவடிகளில் அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுள்ளனர்" என்று கூறியிருந்தார். "வாக்கு சதவீதம் மக்களின் உயர்வான உணர்வைப் பிரதிபலிக்கிறது. இது மிகவும் முற்போக்கானது விஷயம்" என்று ஆந்திரப் பிரதேச அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.வி.ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்தளவுக்கு வாக்கு சதவீதம் உயர்வதற்காகக் காரணம், ஜெகன்மோகன் ரெட்டியா? அல்லது தெலுங்கு தேசமா? யார் ஆட்சியைப் பிடிப்பது என்பது கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த இருகட்சிகளும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பிப்ரவரி மாதமே பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டன.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் கீழ் மட்டத்தில் அதிக தொண்டர்களை வைத்துள்ள கட்சிகள். ஆகவேதான் படிப்பறிவு இல்லாத மக்களும் கூட ஆர்வமாக வந்து வாக்களித்துள்ளனர். இந்தத் தாக்கமே வாக்கு சதவீதம் உயர்வதற்காகக் காரணிகளாக அமைந்துள்ளன என்று ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதாவது 2014இல் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம், மாநிலத்தின் தலைநகரைக் கட்டியெழுப்புவதைத் தாமதப்படுத்தியது. அதுவே கடைசியில் ஆட்சி மாற்றத்திற்காக வழியை ஏற்படுத்திக் கொடுத்தது.

அடுத்து வந்த மாநிலத் தேர்தலில், 79% வாக்குகள் பதிவாகின. அது ஜெகன்மோகன் ரெட்டிக்குச் சாதகமாக அமைந்தது. ஆகவே அவரது கட்சி மாநிலத்தில் புதியதாக ஆட்சியைக் கைப்பற்றியது. புலிவெந்துலா தொகுதியில் ஜெகன்மோகன் போட்டியிட்டுள்ளார். குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு நின்றார். பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் களம் கண்டார். இந்த 3 தொகுதிகளிலும் முறையே 75.80 சதவீதம், 85.87 சதவீதம் மற்றும் 86.87 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒய்எஸ்ஆர்சிபி தலைவரும், ஆந்திர அரசின் அரசியல் ஆலோசகருமான சஜ்ஜலா ராமகிருஷ்ணா ரெட்டி இது குறித்து, "ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் கொள்கைக்கும் மக்கள் அளித்துள்ள பாசிடிவ் ஆன அறிகுறி இது" என்று கூறியுள்ளார். அது பாசிடிவ்வா? அல்லது ஆட்சிக்கு நெகடிவ்வா? என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தெளிவாகிவிடும்.

Tags

Read MoreRead Less
Next Story