60 ஆண்டுகால நாகாலாந்து வரலாறு: முதல் முறையாக 2 பெண் எம்எல்ஏக்கள் தேர்வு

60 ஆண்டுகால நாகாலாந்து வரலாறு: முதல் முறையாக 2 பெண் எம்எல்ஏக்கள் தேர்வு
X

நாகலர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற பெண் எம்எல்ஏக்கள். 

60 ஆண்டுகால நாகாலாந்து வரலாற்றில் முதன்முறையாக இரண்டு பெண் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதேபோல் 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. நாகாலாந்து வரலாற்றில் முதன்முறையாக இரண்டு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சல்ஹூதுனுசா குரூஸ் மற்றும் ஹகானி ஜெஹாலு என்ற இரண்டு பெண் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இருவரும் எண்டிபிபி கட்சியை சார்ந்தவர்கள்.

சல்ஹூதுனுசா குரூஸ் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் கெனிஜாகோ நக்ரோ என்பவரை எதிர்த்து மேற்கு அங்கமி தொகுதியில் போட்டியிட்டார். குரூஸுக்கு ஆதரவாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் நாகாலாந்து நெய்பியு ரியோ ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

ஜெஹாலு டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர். சட்டப்படிப்பு முடித்துள்ள ஜெஹாலு சமூக தொழில்முனைவோராக உள்ளார். யூத்நெட் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் நரி சக்தி புராஸ்கர் விருதை குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றுள்ளார். இவர் திமாபூர்-3 என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

1963ம் ஆண்டு தனி மாநிலமான பிறகு நாகாலாந்தில் ஒரு பெண் கூட எம்எல்ஏ கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த ஆண்டு தேர்தலில் நான்கு பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சல்ஹூதுனுசா குரூஸ், ஹகானி ஜெஹாலு தவிர ரோஸி தாம்சன் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் காஹுலி செமா பாஜக கட்சியிலிருந்தும் போட்டியிட்டனர். இவர்களில் சல்ஹூதுனுசா குரூஸ், ஹகானி ஜெஹாலு ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business